‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ் தனது 94வயதில் இயக்கியிருக்கும் படம் சிங்கீதம். இதில் அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இசையமைத்த அனுபவம் குறித்து தேவிஸ்ரீ பிரசாத் கூறுகையில் ''சீங்கீதம் அவர்கள் படத்துக்கு இசையமைத்தது என் பாக்கியம். சிங்கிதம் சாரைப் பற்றிப் பேச புஷ்பக விமானம் என்ற வார்த்தையே போதும். எப்போதும் அவர் இசைக்குத்தான் முதலிடம் கொடுப்பார். 'சிங் கீதம்' படத்திற்கு நான் இசையமைப்பது ஒரு வரம் என்று உணர்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறந்த எழுத்துக் குழு உள்ளது. சிங்கிதம் சாருடன் இந்தக் கதையைப் பற்றி விவாதித்தபோது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். அவர் இதுவரை செய்துள்ள சோதனைகளை வேறு யாரும் செய்ததில்லை. அவர் இன்னும் ஒரு சிறு குழந்தையைப் போலவே பேசுகிறார். அதுதான் அவரிடம் உள்ள சிறந்த குணம்.
சிறுவயதிலிருந்தே, செய்தித்தாள் கட்டுரைகளை இசையாக மாற்றும் பழக்கம் எனக்கு உண்டு. அந்தப் பழக்கம் இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது போன்ற வாய்ப்புகள் வாழ்நாளில் ஒருமுறைதான் வரும். ஒரு படத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு பாடல் போல ஒலிக்கச் செய்வது மிகவும் சவாலானதாகத் தோன்றியது. அந்த வார்த்தை இன்று ஒரு பாடலாக மாறியுள்ளது. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் தங்களது சொந்தக் குரலில் பாடியுள்ளனர். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்'' என்றார்.
படம் குறித்து சிங்கிதம் சீனிவாச ராவ் கூறுகையில் 'இந்தப் படம் எனது 40 வருடக் கனவு. வார்த்தைகளே பாடல்கள் என்றால், இந்தக் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன் , தெய்வீக அருளால், நாக் அஸ்வின் தயாரிப்பில் வைஜயந்தி மூவிஸ் இறுதியாக இந்தப் படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை நான் இயக்கினேன். நாக் அஸ்வின் ஒரு உலகப் புகழ்பெற்ற இயக்குநர். இந்தப் படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் படத்தை விட என்னை அதிகமாக நேசித்தார். என்னை ஒரு தந்தையைப் போல நடத்தினார். கமல்ஹாசன் இந்த பட விழாவிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிணைப்பு உள்ளது'' என்றார்.