'பெத்தி' படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி
கன்னட முன்னணி நடிகராக சிவராஜ்குமார், 'ஜெயிலர்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள புச்சிபாபு சனா இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பெத்தி திரைப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கவுரி நாயுடு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார் வரும் ஜூன் நான்காம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தில் நடித்தது குறித்து சிவராஜ்குமார் பேசுகையில், “இந்த படத்தின் கதையைக் கேட்டதுமே நான் மகிழ்ச்சியாக நடிக்க ஒப்புக்கொண்டேன் ஆனால் துரதிஷ்டவசமாக அதன்பிறகு தான் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது இது ஒரு பிரம்மாண்ட படம் என்பதால் என்னுடைய கால்ஷீட் சிக்கல் காரணமாக படக்குழுவினருக்கு தேவையில்லாத சிரமம் கொடுக்கக் கூடாது என்று நினைத்து இந்த படத்தில் இருந்து விலகி விடலாமா என்று கூட என் எண்ணத்தை கூறினேன்.
ஆனால் இயக்குனரும் ராம்சரணும் நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்தை செய்ய வேண்டும்.. நாங்கள் எவ்வளவு நாட்கள் ஆனாலும் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்று அன்போடு கூறினார்கள். அவர்களின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.