உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம்

நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம்


மலையாள திரையுலகில் நடிகர் சங்கத்திற்கு கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றது. மோகன்லால் தலைமையிலான நிர்வாகக் குழு ராஜினாமா செய்த பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் தலைமையிலான புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது. கடந்த எட்டு மாதங்களாக பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லாத நிலையில், சங்கத்தின் இணைச் செயலாளரும் 'திரிஷ்யம்' பட நடிகையுமான அன்சிபா ஹசன், நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் நடிகர்கள் டினி டாம், லட்சுமி பிரியா ஆகியோர் மீது முதல்வரிடமும், அவரது வழிகாட்டுதலின்படி போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்ல, நடிகர் சங்கத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவரை வலுக்கட்டாயமாக பணி நீக்கம் செய்து, அதன்பிறகு எதிர்ப்பு எழுந்ததால் மீண்டும் அவர் பணியில் அமர்த்தப்பட்டார். அவரும் இரண்டு நிர்வாகிகள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். நடிகை ஸ்வேதா மேனன், இதுபோன்று நிர்வாகத்தில் இருக்கும் உறுப்பினர்கள் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை வைக்காமல், சங்கத்துக்குள்ளேயே தங்களது பிரச்சினைகளை பேசி முடிக்க முன்வர வேண்டும் என சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியது தோல்வியிலேயே முடிந்தது.

இந்த நிலையில் பிரபல மலையாள குணச்சித்ர நடிகை மாலா பார்வதி, “பெண் தலைமையில் உள்ள நடிகர் சங்கம் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் தற்போது நிர்வாகத்தில் உள்ள பெண்கள் பெரிய அளவில் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். தங்கள் உறுப்பினர்களின் பிரச்னைகளை வெளிப்படையாக கூறும் சூழல் நடிகர் சங்கத்தில் இல்லை. அதேபோல் நடிகை முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படவில்லை. அவர்களில் ஒருவர் கூட ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பாக அழைக்கப்படவில்லை. அதனால் தன் மீதான நம்பிக்கையை தற்போதைய புதிய நிர்வாகக் குழு இழந்துவிட்டது. எனவே தற்போது பொறுப்பேற்றுள்ள முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும்” என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !