'டிராகன்': ஹீரோக்கள் மாறினாலும் அதே ஹீரோயிசம் தானா ?
'கேஜிஎப்' என்ற இரண்டு பாகத்தில் வெளிவந்த பிரமாண்டப் படங்களைக் கொடுத்து இந்தியத் திரையுலகத்தையே தன் பக்கம் திரும்ப வைத்தவர் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல். அந்தப் படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்த 'சலார்' படத்தை இயக்கினார்.
அடுத்து ஜுனியர் என்டிஆர் நடித்து வரும் 'டிராகன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ, ஜுனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் விஷுவல் மிரட்டல் என்று பேசப்பட்டாலும் மறுபக்கம், அதே 'கேஜிஎப், சலார்' சாயல் தான் இருக்கிறது என்றும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
'கேஜிஎப்' படத்தில் தங்கச் சுரங்கம், தங்கக் கடத்தல் என்று கதைக் களம் அமைத்திருந்தார் பிரசாந்த் நீல். அடுத்து 'சலார்' படத்தில் மன்னர் பரம்பரை, அதிகாரப் போட்டி, அரசியல் என களம் அமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் 'அதிகாரம்,' என்பதுதான் மையக் கருவாக இருந்தது.
அது போலவே தற்போது 'டிராகன்' படத்திலும் அமைத்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் 'ஓப்பியம்' எனப்படும் போதைவஸ்து சாம்ராஜ்ஜியம் பற்றிய படமாக இருக்கும் எனத் தெரிகிறது.
கேஜிஎப் ஹீரோ, சலார் ஹீரோ எப்படி இருந்தார்களோ அதே போலத்தான் டிராகன் ஹீரோவும் இருக்கிறார், அதே ஹீரோயிசம் தான் இருக்கப் போகிறது என்பது டிரைலரைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது.