ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த 'கருப்பு' படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஒரு போராட்ட காட்சிக்கு, இளையராஜா இசையில் உருவான பாடலான, போராடடா ஒரு வாள் ஏந்தடா என்ற பாடல் வரும். அந்த பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதால் இளையராஜா வழக்கு தொடுத்துள்ளார் என்று அந்த காட்சி நீளும். அடுத்த காட்சியில் பாட்டை நிறுத்துங்க இளையராஜா காப்பீடு கேட்கப் போறார் என்ற ரீதியில் ஆர்.ஜே பாலாஜி வசனம் பேசி இருப்பார். இந்த காட்சி இளையராஜா ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அக்காட்சியை நீக்கும்படி பலரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவிற்கும் இசைக்கும் ஆற்றியுள்ள அசாதாரணமான பங்களிப்பிற்கு, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது மனமார்ந்த மரியாதையையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. அவரது இசை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது.
'கருப்பு' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் அவருக்கு வருத்தத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அந்த வசனம் அத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியதற்காக நாங்கள் எங்களது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இளையராஜாவையோ, அவரது பங்களிப்பையோ அல்லது அவரது உரிமைகளையோ எந்த வகையிலும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ அல்லது அவமதிக்கவோ எங்களுக்கு எவ்வித நோக்கமும் இல்லை. அந்த குறிப்பிட்ட குறிப்பு ஒரு பரந்த நையாண்டி சூழலின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டது, மேலும் அது அவரை நேரடியாகக் குறிப்பிடும் தனிப்பட்ட கருத்தாக உருவாக்கப்படவில்லை.
இருப்பினும், அவரது உணர்வுகளை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். எங்களது மரியாதையின் அடையாளமாக, இத்திரைப்படத்தின் எதிர்காலப் பதிப்புகள் மற்றும் அடுத்தடுத்த வெளியீடுகளில் அந்த குறிப்பிட்ட பகுதியை நீக்க/மாற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை என்றும் மிக உயர்ந்த மரியாதையுடன் தொடர்ந்து நடத்துவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.