நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது ஒரு பத்திரிகையாளர், ''விஜய் உடன் திரிஷா பயணிப்பது போல நீங்களும் பயணிப்பீர்களா?'' எனக் கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாளவிகா, ''இது தேவையற்ற கேள்வி'' என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளதாவது: சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினரின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்தாலும், அவர்களில் ஓரிருவர் முற்றிலும் தேவையற்றதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கமுடையதுமான, மிகவும் நாகரிகமற்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.
விஜயை எனக்குக் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தெரியும். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். மேலும், அவரை ஒரு நண்பராகக் கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவரது திரைப் பயணத்தை உற்று நோக்குவது, வியக்கத்தக்க ஓர் அனுபவமாகவே இருந்து வருகிறது.
இனிவரும் காலங்களில் ஊடகங்களுடனான கலந்துரையாடல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட அனைவரின் நலன் கருதி, கண்ணியத்துடனும் பரஸ்பர மரியாதையுடனும் அமைந்தால் பெரிதும் வரவேற்பேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.