விஜய் முதல்வர் ஆனதால் பொறாமையா? அதிமுக-திமுக கூட்டணிக்கு முயன்றேனா? : ரஜினிகாந்த் விளக்கம்
திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க ரஜினிகாந்த் முயன்றதாக செய்திகள் பரவின. இது பரபரப்பை கிளப்பியதால், இது குறித்து ரஜினிகாந்த் தற்போது விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தோல்வி எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் எனக்கு 38 ஆண்டுகளுக்கு மேலான நண்பர். எங்களின் நட்பு, கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது. அதற்காக அவரை சந்தித்து ஆறுதல் கூறினேன். ஆனால், விஜய் முதல்வராக தடுக்க, பெரிய இரண்டு கட்சிகளை இணைக்க முயன்றதாக விமர்சனங்கள் எழுந்தன. அப்படி தரம்கெட்டு பேசுபவன் இந்த ரஜினிகாந்த் இல்லை.
வாழ்த்து சொல்லவில்லையா
விஜய் வெற்றிப்பெற்றதும் சமூக வலைதளம் மூலமாக நான் வாழ்த்து சொல்லியிருக்கிறேன். சமீபத்தில் நான் விமான நிலையம் சென்றிருந்தபோது ஒருவர் விஜய் முதல்வர் ஆவது பற்றி கேள்வி எழுப்பினார். அவர் பத்திரிகையாளர் போலவே தெரியவில்லை. ஒரு மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டு கேட்டார். அதனால், நான் பதில் சொல்லாமல் சென்றேன். அதனையும் விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை என விமர்சனம் எழுந்தது.
பொறாமை
அடுத்ததாக விஜய் மீது பொறாமை என்றெல்லாம் கூறினர். நான் அரசியலிலேயே இல்லை, பிறகு ஏன் விஜய் முதல்வர் ஆவதற்கு நான் பொறாமைப்பட வேண்டும்? ஒருவேளை கமல் முதல்வராகி இருந்தால் பொறாமை வந்திருக்குமோ இல்லையோ? எனக்கும் விஜய்க்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டு தலைமுறை வேறுபாடு உள்ளது. அவர் முதல்வராக ஆவதற்கு எனக்கு ஏன் பொறாமை? இந்த வயதில் சினிமாவில் இருந்து ஒருவர், இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக வெற்றிப்பெற்றது பொறாமை இல்லை, ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தையே கொடுத்தது. சினிமா புகழின் மூலம் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அவகாசம்
பெரும் எதிர்பார்ப்பு விஜய் மேல் இருக்கிறது. அதனை பூர்த்தி செய்வார் என நம்புகிறேன். மக்களை சந்தித்து நல்லது செய்வார் என நம்புகிறேன். அவரை 2 ஆண்டுகளுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது. அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.
இனிமேல் அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தொண்டர்கள், ரசிகர்கள் என யார் என்ன தப்பு செய்தாலும், நேரடியாக விஜயை தான் பாதிக்கும்.
100 சதவீதம் வெற்றி
நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என சுமார் 3 பக்கத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வெற்றிப்பெற்றிருப்பேன். சினிமா துறையில் இருந்து பலரும் போய் முதல்வர் விஜயை பார்த்துவிட்டு வந்துள்ளனர். சும்மா சம்பிரதாயத்திற்கு போய் பார்த்துவிட்டு வருவது எனக்கு பிடிக்காது.
60 ஆண்டுகள் இரு கட்சிகளை பார்த்துவிட்டு மாற்றம் தேவை என இளைஞர்கள், பெண்கள் முடிவு செய்து விஜயை தேர்ந்தெடுத்துள்ளனர். இளைஞர்கள், பெண்கள் மட்டுமல்ல சமூக வலைதளமும் முக்கிய பங்கு வகித்தது. விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.