குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை குழந்தையுடன் வந்து வாங்குறாங்க: பேரரசு கிண்டல்
சென்னையில் நடந்த சைலன்ட் இன்புளூன்சர் என்ற ஆல்பம் வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜயை, இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரரசு ஆகியோர் வாழ்த்தி பேசியுள்ளார். தமிழக முதல்வரானப்பின் நடந்த முதல் சினிமா நிகழ்ச்சி என்பதால் வாழ்த்து ஒலியும் அதிகமாகவே இருந்தது.
ஆர்.வி.உதயகுமார் பேசியது: த வெ க ஆட்சி தொடருமா என்று பலருக்கும் கேள்வி வந்தது. அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டார். அவருக்கு வாழ்த்துகள். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்து முடியாததை, முதல் முயற்சியிலே சாதித்தவர் விஜய். தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்குபின் இப்படி சாதித்தவர் விஜய்தான். இதை ஜீரணிக்க முடியாமல் பலர் கஷ்டப்படுகிறார்கள். அவர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று முன்பே நான் பேசியிருக்கிறேன். இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர் ஆட்சியில் இருப்பார். அவரிடம் வேகம் இருக்கிறது, விவேகம் இருக்கிறது. வயது இருக்கிறது, திரையுலகிற்கு அவர் சப்போர்ட் செய்வார். இவ்வாறு அவர் பேசினார்.
இயக்குனர் பேரரசு பேசுகையில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய் முதல்வர் ஆகி இருக்கிறார். இது சினிமா துறையினருக்கு பெருமையான விஷயம். சினிமாவில் பல பிரச்னைகள் இருக்கிறது. அது குறித்து பல மேடைகளில் புலம்பிக்கொண்டு இருக்கிறோம். அனைத்திற்கும் விஜய் ஆட்சி விடிவு காலமாக அமைய வேண்டும். அவர் ஆட்சியில் மாநில விருதை உடனே கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டே அந்த விருதை கொடுக்க வேண்டும். 2026க்கான விருது 2027க்கு கொடுக்கணும். 2027ல் கொடுக்க வேண்டாம்.
குழந்தை நட்சத்திரம் விருது பெறுபவர்கள், 10 ஆண்டுகள் கழித்து குழந்தையுடன் வருகிறார்கள். ஹீரோயின் விருது வாங்குபவர்கள், 10 ஆண்டுகள் கழித்து அம்மா வேடத்துக்கு மாறிவிடுகிறார்கள். திரையுலகத்தை எம்ஜிஆர், கருணாநிதி குடும்பம் மாதிரி நினைத்தார்கள். விஜயும் அப்படி நடத்த வேண்டும்'' என்றார். முதல்வர் விஜயை வைத்து படம் இயக்கிய எழிலும் அவரை வாழ்த்தி பேசினார்.