கிளாடியேட்டர்ஸ் : ரிலீசுக்கு தயாரான அஜித்தின் ரேஸ் ஆவணப்படம்
அஜித்தின் பிறந்த நாளான நேற்று அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அஜித்தின் கார் ரேசை மையமாக கொண்டு உருவாக்கி உள்ள 'கிளாடியேட்டர்ஸ்' என்ற டாக்குமெண்டரி படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள தகவல் வெளியானது.
இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 'அஜித் குமார் ரேஸிங்' என்ற கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கி துபாய், பெல்ஜியம் உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்று பரிசுகள் வென்றார் அஜித். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக அஜித் பங்கேற்று வரும் கார் பந்தயங்கள், அதில் செய்த சாதனைகள் போன்றவற்றை இயக்குனர் ஏ.எல்.விஜய் வீடியோவாக ஆவணப்படுத்தி வந்தார்.
தற்போது அதற்கு 'கிளாடியேட்டர்ஸ்' என்று டைட்டிலும் வைத்துள்ளனர். அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் எல்எல்சி இதனை தயாரித்துள்ளது, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். விரைவில் இந்த படம் தியேட்டர்களில் அல்லது ஓடிடியில் வெளியாகும் என்று தெரிகிறது. 'கிளாடியேட்டர்ஸ்' என்றால் வெல்ல முடியாத வீரர்கள் என்று பொருள்.