'ஜெயிலர் 2'வில் நடித்ததை உறுதிப்படுத்திய மேக்னா ராஜ்
தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். அதன்பின் மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். கன்னட நடிகரும், நடிகர் அர்ஜுனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2020ல் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானார். அந்தச் சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜுக்கு 2021-ல் ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய மேக்னா ராஜ், தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது : எனது கணவர் சிரஞ்சீவி சார்ஜா ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். எப்படியாவது, அவரது படத்தில் நடித்துவிட வேண்டும் என்பது எங்கள் இருவரின் கனவாக இருந்தது.. இன்று எங்களது எட்டாவது திருமண நாள். இந்த நாளில், நாங்கள் மனதில் வைத்திருந்த அந்தக் கனவு நிறைவேறிய தருணத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. இது என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல். இது உங்களால் தான் சாத்தியமானது என்று தனது கணவர் குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் மேக்னா ராஜ்..