sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

திருக்கோவிலுார் உத்தமன்

/

திருக்கோவிலுார் உத்தமன்

திருக்கோவிலுார் உத்தமன்

திருக்கோவிலுார் உத்தமன்


ADDED : ஆக 28, 2025 12:56 PM

Google News

ADDED : ஆக 28, 2025 12:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓணத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாளைத் தரிசிப்போம். 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று ஆண்டாள் திருப்பாவையில் இவரை போற்றுகிறாள்.

மகாபலி மன்னனை ஆட்கொள்ள வாமனராக வந்த மகாவிஷ்ணு விஸ்வரூபம் எடுத்தார். இந்த காட்சியை தரிசிக்க மிருகண்டு என்னும் முனிவர் விரும்பினார்.

பிரம்மாவின் வழிகாட்டுதலுடன் பூலோகத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள திருக்கோவிலுாரில் தவம் புரிந்தார். முனிவரின் மனைவி மித்ராவதியும் உடனிருந்து அன்னதானம் செய்து வந்தார். முனிவரைச் சோதிக்க விரும்பிய மகாவிஷ்ணு, முதியவர் வடிவில் தோன்றி யாசகம் கேட்டார். மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம் அதை தெரிவித்தார். ஒரு நெல்மணி கூட இல்லாத நிலையில் மித்ராவதி, “நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால் இந்த பாத்திரத்தில் அன்னம் நிரம்பட்டும்” என்றாள்.

மகாவிஷ்ணுவின் அருளால் அன்னம் நிரம்பியது. உடனே முதியவராக வந்த விஷ்ணு சுயவடிவில் காட்சியளித்தார். அவரே உலகளந்த பெருமாளாக இங்கு கோயில் கொண்டார். விஷ்ணுவின் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு முனிவரின் உபசரிப்பால் தன்னை மறக்கவே வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்தி நிற்கிறார். உலகளந்த பெருமாள், ஆயனார், இடைக்கழி ஆயன் என்றும் இவருக்கு பெயருண்டு.

மரத்தால் செய்யப்பட்ட இவரது திருமேனியே 108 திவ்யதேசங்களில் மிக உயரமானது. கருவறையில் மூலவர் வலது காலால் ஆகாயத்தை அளந்த படியும், இடது காலை பூமியில் ஊன்றியும் நிற்கிறார். துாக்கிய வலது திருவடிக்கு பிரம்மா தீர்த்தத்தால் அபிேஷகம் செய்கிறார். கீழே ஊன்றிய இடது திருவடியின் கீழ் மகாபலியின் மகன் நமச்சு மகாராஜா இருக்கிறார். பெருமாளுக்கு அருகில் மகாபலியின் தாத்தா பிரகலாதன், மகாலட்சுமி, மகாபலி, மிருகண்டு முனிவர், மித்ராவதி ஆகியோர் உள்ளனர். பூங்கோவல் நாச்சியார் என்னும் பெயரில் தாயார் தனி சன்னதியில் இருக்கிறார். உற்ஸவரின் திருநாமம் கோபாலன்.

5 ஏக்கர் பரப்பு கொண்ட கோயிலின் ராஜகோபுரம் 192 அடி. 11 நிலைகள் கொண்ட இக்கோபுரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம். (முதலாவது ஸ்ரீரங்கம், இரண்டாவது ஸ்ரீவில்லிபுத்துார்) பெருமாள் சன்னதிக்கு எதிரில் 40 அடி உயர ஒரே கல்லால் ஆன கருடத்துாண் உள்ளது. மூலவரின் பின்புறம் உள்ள வாமனரை ஓணத்தன்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். கோயில் நுழைவு வாயிலின் வலப்புறம் சாளக்கிராம கிருஷ்ணர் இருக்கிறார். வீர ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன.

எப்படி செல்வது: விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் 40 கி.மீ.,

விசேஷ நாள்: ஆவணி திருவோணம், பங்குனி பிரம்மோற்ஸவம், மாசிமகம், வைகுண்ட ஏகாதசி.

நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 98407 46422

அருகிலுள்ள கோயில்: ஆதிதிருவரங்கம் ரங்கநாதப்பெருமாள் கோயில் 16 கி.மீ., (நிம்மதிக்கு)

நேரம்: காலை 6:00 - இரவு 7:30 மணி

தொடர்புக்கு: 04153 - 293 677






      Dinamalar
      Follow us