ADDED : ஆக 28, 2025 12:34 PM

ஆந்திர மாநிலம் சித்துாரில் உள்ள சிவத்தலம் குடிமல்லம். வேத காலத்தைச் சேர்ந்த இத்தலத்தில் பரசுராமர் வழிபட்ட பரசு ராமேஸ்வரர் குடிகொண்டிருக்கிறார்.
ஒருமுறை பரசுராமர் தன் தந்தையின் பேச்சைக் கேட்டு தாயைக் கொன்றார். இருந்தாலும் தான் பெற்ற வரத்தால் தாயை உயிர் பிழைக்கச் செய்தார். என்னதான் இருந்தாலும் தாயைக் கொல்வது பாவம் அல்லவா... அதற்கு பிராயச்சித்தமாக இங்கு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குளம் ஒன்றை வெட்டினார். அதில் அதிசயமாக ஒரு பூ மட்டும் பூத்தது.
இதை தினமும் சுவாமிக்கு சாத்தி வந்தார். தினமும் பூக்கும் ஒரு பூவை யாரும் பறிக்கக் கூடாது என்பதற்காக, பூவுக்கு காவலாக சித்ரசேனன் என்ற யட்சனை நியமித்தார். ஒருநாள் பரசுராமர் காட்டுக்கு சென்றிருந்தபோது, அந்த யட்சனே அப்பூவை பறித்து சிவபூஜை செய்தார். திரும்பி வந்த பரசுராமர் நடந்ததை அறிந்து யட்சனை கொல்லச் சென்றார். அப்போது தோன்றிய சிவபெருமான், 'எனக்காக யட்சனாக வந்தது பிரம்மா' எனக் கூறி ஆசி வழங்கினார். இப்படி பரசுராமர், பிரம்மனால் வழிபட்ட சிவலிங்கம்தான் இது.
லிங்கோத்பவர் வடிவில் மூலவர் காட்சியளிக்கிறார். சிவலிங்கத்திற்குள் தலை, கால், கை என எல்லா அங்கமும் இருக்கும் வடிவமே லிங்கோத்பவர். சிவன் கோயிலில் கருவறைக்கு பின்புறத்தில் லிங்கோத்பவர் சன்னதி இருக்கும். ஆனால் இங்கு மூலவராக இருப்பது சிறப்பு. கருங்கல்லால் ஆன சிவலிங்கம்
5 அடி உயரம், 1 அடி விட்டத்தைக் கொண்டுள்ளது. தரையில் சதுர லிங்கத்தில் சித்ரசேனன் (பிரம்மா) குள்ள வடிவிலும், நடுவில் பரசுராமரும் (மகாவிஷ்ணு), அதற்கு மேல் லிங்கமும் (சிவன்) உள்ளது. மும்மூர்த்தியும் ஒரே வடிவாக காட்சி தருகின்றனர். சுவாமிக்கு திங்களன்று ருத்ராபிஷேகம் நடக்கிறது. ஆனந்தவல்லி என்பது அம்மனின் திருநாமம்.
சோழர்கள், விஜயநகர மன்னர்கள் வழிபட்டுள்ளனர். காலப்போக்கில் காடாக மாறியதால் கோயில் மறைந்தது. 1911ல் டி.ஏ.கோபிநாத் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாடு தொடங்கியது. சுவர்ணமுகி ஆற்றங்கரையில் உள்ள இக்கோயிலுக்கு பசுமையான வயல்களை கடந்தே செல்ல வேண்டும்.
எப்படி செல்வது
* திருப்பதியில் இருந்து 20 கி.மீ.,
* ரேணிகுண்டா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 7 கி.மீ.,
விசேஷ நாள்: திங்களன்று ருத்ராபிஷேகம், மகா சிவராத்திரி.
நேரம்: காலை 6:00 - 1:30 மணி; மதியம் 3:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 94901 81917
அருகிலுள்ள கோயில்: தொண்டவாடா அகஸ்திஸ்வரர் 32 கி.மீ., (கல்வியில் சிறக்க...)
நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மதியம் 3:30 - 7:30 மணி