
கேரளாவில் எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரையில் ஓண நாயகனான வாமனர் கோயில் கொண்டிருக்கிறார். இக்கோயில் பரசுராமரால் கட்டப்பட்டது.
அசுர குலத்தில் பிறந்த மகாபலிச்கரவர்த்தி தன் செல்வத்தை கேட்டவருக்கு எல்லாம் தானம் செய்தார். இதனால் தன்னை விட தர்மம் செய்பவர் யாருமில்லை என்னும் ஆணவம் ஏற்பட்டது. ஆணவம் அழிந்தால் கடவுளை அடையும் தகுதி கிடைக்கும் என எண்ணினார் மகாவிஷ்ணு. அதற்காக குள்ள வடிவில் 'வாமனர்' என்ற பெயரில் அவதரித்து மகாபலியிடம் தானமாக மூன்றடி நிலம் கேட்டார். “குள்ளமான தங்களின் சிறிய காலடியால் மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே! இன்னும் அதிகம் கேட்கலாமே!” என்றார் மகாபலி. அசுரர்களின் குலகுரு சுக்ராச்சாரியார், வந்திருப்பவர் விஷ்ணு என அறிந்து, 'தானம் வேண்டாம்'' என தடுத்தும் மகாபலி கேட்கவில்லை.
உடனே விஸ்வரூபம் எடுத்த விஷ்ணு, ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பின், “மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே?” என கேட்டார். அகந்தை அடங்கிய மகாபலி தலை வணங்கி, “சுவாமி... என் தலையைத் தவிர வேறு இடமில்லை'' என்றார். காலால் அழுத்தி மகாபலியை பாதாள உலகத்திற்கு அனுப்பினார் விஷ்ணு. இந்த வரலாறு நிகழ்ந்த தலம் கேரளாவில் எர்ணாகுளம் அருகிலுள்ள காக்கரை. இங்கு பெருமாள் காக்கரையப்பன் (வாமனர்) என்ற பெயரில் அருள்புரிகிறார். தாயாரின் திருநாமம் பெருஞ் செல்வநாயகி.
கேரள பாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவக் கோயில் இது. முன் மண்டபத்தில் வாமனரின் மரச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.கருவறையில் வாமனர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு தமிழில் கல்வெட்டுகள் உள்ளன. 9 முதல் 12 ம் நுாற்றாண்டு வரை சேர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
கோயிலுக்கு வெளியே தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கோபால கிருஷ்ணர், நாகர் சன்னதிகள் உள்ளன. மகாபலி வழிபாடு செய்த சிவலிங்கம் உள்ளது. நுழைவு வாசலில் உள்ள மகாபலியின் சிம்மாசனம் அருகே பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது: எர்ணாகுளத்தில் இருந்து 20 கி.மீ.,
விசேஷ நாள்: ஆவணி மாத அஸ்தம் முதல் திருவோணம் வரை திருவிழா.
நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 99952 16368, 97475 36161
அருகிலுள்ள கோயில்: திருப்பூணித்துறை பூரணத்திரயேஸ்வரர் கோயில் 13 கி.மீ.,(மனநிறைவுடன் வாழ...)
நேரம்: அதிகாலை 4:00 - 11:15 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 0484 - 277 4007