
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் திராக்ஷாராமம் பீமேஸ்வரரை வழிபட்டால் தன்னம்பிக்கை இல்லாதவருக்கும் வெற்றி கிடைக்கும்.
தாராசுரன் என்பவன் சாகாவரம் வேண்டி தவம் செய்தான். இதன் பயனாக ஆத்ம லிங்கம் ஒன்றை சிவபெருமானிடம் பெற்றான். அதை தன் தொண்டையில் அடக்கிக் கொண்டான். இந்த லிங்கத்தை வைத்திருப்பவரை யாராலும் கொல்ல முடியாது என்பதால் ஆணவம் ஏற்பட்டது. தேவர்களை துன்புறுத்த தொடங்கினான். அவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர் முருகப்பெருமானிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
தந்திரமாக செயல்பட்ட அவர் ஆத்ம லிங்கத்தை பறித்தார். அது சிதறி ஐந்து இடங்களில் விழுந்தன. அவையே ஆந்திராவில் பஞ்சராமக் கோயில்கள் எனப்படுகின்றன. அதில் திராக்ஷாராமம் பீமேஸ்வரர் கோயிலும் ஒன்று. மற்றவை அமராவதி, பீமாவரம், பாலகொள்ளு, சாமர்லகோட்டா சிவன் கோயில்கள்.
கோதாவரி நதிக்கரையில் உள்ள இக்கோயில் 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சாளுக்கிய மன்னர் முதலாம் பீமன் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இந்த மன்னரின் பெயரால் 'பீமேஸ்வர்' என சுவாமி அழைக்கப்படுகிறார். நான்கு கோபுரத்துடன் கோயில் கம்பீரமாக காட்சி தருகிறது.
இதில் ஐந்து நிலை ராஜகோபுரத்தில் சுதை சிற்பங்கள் நிறைய உள்ளன. இதைக் கடந்தால் நர்த்தன கணபதியை தரிசித்து விட்டு கருவறைக்கு செல்லலாம். அங்கு துாரத்தில் சிவலிங்கத்தின் அடிபாகமும், கருவறையை ஒட்டியுள்ள படிகள் வழியாக ஏறினால் லிங்கத்தின் மேல் பாகத்தையும் தரிசிக்க முடியும். ஸ்படிக லிங்கமான இது 2.6 மீ., உயரம் கொண்டது. தினமும் அதிகாலையில் சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது.
இவரை வழிபட்டால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். மாணிக்யாம்பா அம்மன் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இடதுபுறம் பார்ப்பது போல அம்மனின் முகம் உள்ளது. தாட்சாயிணியின் இடது கன்னம் விழுந்த தலம் என்பதால் இக்கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாகும். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. தட்சன் வளர்த்த யாக குண்டமே தீர்த்தமாக உள்ளது. கோயிலின் நுழைவு வாசலின் அருகே மகாலட்சுமி, மகாவிஷ்ணு சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: காக்கி நாடாவில் இருந்து 28 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, மகாசிவராத்திரி, பீமேஷ்வரர் அவதாரதினம், திருக்கல்யாணம்.
நேரம்: அதிகாலை 5:30 - 11:30 மணி; மதியம் 3:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 08857- 252 488
அருகிலுள்ள கோயில்: சாமார்ல கோட்டா பீமேஸ்வரர் 42 கி.மீ., (செல்வாக்குடன் வாழ...)
நேரம்: அதிகாலை 5:00 - 2:00 மணி; மதியம் 3:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 08897 - 205 858