
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் நின்ற, அமர்ந்த, கிடந்த கோலங்களில் பெருமாள் காட்சியளிக்கிறார். அத்துடன் மூன்று தளங்கள் கொண்ட இக்கோயிலில் பெருமாளுக்கு ஒன்பது சன்னதிகள் உள்ளன. மூலவர் மீதுள்ள அஷ்டாங்க விமானத்தை வலம் வருவோருக்கு கனவு நனவாகும். தடைகள் விலகும்.
கற்சுவரில் வேலைப்பாடு மிக்க சிற்பங்கள், வண்ணம் தீட்டப்படாத அழகான கோபுரம் நம்மை கம்பீரமாக வரவேற்கின்றன. பல நுாற்றாண்டாக பல்லவர், சோழர், பாண்டியர், சம்புவராயர், விஜயநகர மன்னர்கள் என பலரது திருப்பணிகளால் இக்கோயில் வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் இக்கோயில் ஸ்ரீவேலி விஷ்ணு கிரஹம், கொங்கரையர் நின்ற பெருமாள் கோயில், வெள்ளைமூர்த்தி ஆழ்வார் கோயில், ராஜேந்திர சோழ விண்ணகர், புருேஷாத்தமத்துப் பெருமாள் கோயில், பஞ்சவரதர் கோயில் என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டது.
கீழ்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களில் முறையே நின்ற, அமர்ந்த, கிடந்த கோலத்தில் பெருமாள் இருக்கிறார். கீழ் தளத்தில் கிழக்கு நோக்கியபடி சுந்தர வரதரும், மேற்கு நோக்கியபடி அநிருத்த வரதரும், வடக்கு நோக்கியபடி கல்யாண வரதரும், தென்மேற்கு நோக்கி அச்சுத வரதரும் உள்ளனர். இவை பெருமாளின் நான்கு வியூகங்கள் ஆகும்.
படிகள் ஏறி நடுத்தளத்திற்கு சென்றால் இதே அமைப்பு. கிழக்கு நோக்கி வைகுந்த வரதர், தெற்கு நோக்கி கிருஷ்ணன், அர்ஜூனன், மேற்கு நோக்கி நரசிம்மர், வடக்கு நோக்கி பூவராகர் சன்னதிகள் உள்ளன. இன்னும் படிகள் ஏறி மேல் தளத்தை அடைந்தால் பள்ளி கொண்ட பெருமாளை தரிசிக்கலாம். இப்படி பெருமாளின் ஒன்பது கோலங்களை தரிசிக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனந்தவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. வைகானச ஆகம அடிப்படையில் வழிபாடு நடக்கிறது. பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி அஷ்டாங்க விமானத்தை 12 முறை சுற்றினால் விருப்பம் நிறைவேறும். மூட்டு சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் ஐந்து வகையான தைலங்களை பெருமாளுக்கு சாத்துகின்றனர். இந்த மருந்து பிரசாதத்தை பூசினால் மூட்டுவலி குணமாகும்.
உத்திரமேரூர் என்றதும் நினைவுக்கு வருவது சோழர் கால குடவோலை முறை. ஆம். பல ஆண்டுக்கு முன்பே நம் நாட்டில் தேர்தல் முறை இருந்திருப்பதை இது காட்டுகிறது. பல்லவ மன்னரான நந்திவர்மன் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு இப்பகுதியை தானமாக அளித்தார்.
எப்படி செல்வது: காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் 28 கி.மீ., அங்கிருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி.
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 94430 68382, 99948 07592
அருகிலுள்ள கோயில் : உத்திரமேரூர் பாலசுப்பிரமணியர் 1 கி.மீ.,(குழந்தை வரம் கிடைக்க...)
நேரம்: அதிகாலை 5:00 - 8:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி