
தென்காசி மாவட்டம் கீழாம்பூரில் ராஜமாதங்கி அம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். வெள்ளியன்று இக்கோயிலை தரிசிப்போருக்கு அம்மன் ராஜயோக வாழ்வு தருகிறாள்.
தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என அனைவரையும் அடக்குமுறையால் வேதனைக்கு ஆளாக்கினான் மகிஷாசுரன். அவனை எதிர்க்கும் வலிமை இல்லாததால் அனைவரும் சிவனை தஞ்சம் அடைந்தனர். ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என அசுரன் வரம் பெற்றிருந்தான். அதனால் அசுரனை அழிக்கும் பொறுப்பை பார்வதியிடம் ஒப்படைத்தார் சிவன். துர்கையாக வடிவெடுத்து அவளும் போருக்கு புறப்பட்டாள். அசுரன் கொல்லப்பட்டான்.
பின்னர் சாந்த கோலத்துடன் இத்தலத்தில் குடிகொண்டாள். கங்கை நதியே இங்கு கடனா நதியாக பாய்கிறது. நதியின் தென்கரையில் ராஜமாதங்கி வீற்றிருந்து நாடி வருவோரை காத்தருள்கிறாள். அத்திரி முனிவருக்குக் கோயிலின் வடக்கு வாசலில் காட்சி அளித்து 'வடக்கு வாசல் செல்வி' என்ற பெயரில் இருக்கிறாள்.
மதங்க முனிவரின் மகளாக அவதரித்ததால் ராஜமாதங்கி என இவள் பெயர் பெற்றாள். லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீசாக்த ப்ரமோதத்தம், மீனாட்சி பஞ்சரத்னம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம், நவரத்னமாலா போன்ற நுால்களில் ராஜமாதங்கியின் வரலாறும், பெருமையும் இடம் பெற்றுள்ளது. இசைவாணியாகவும், வாக்தேவதையாகவும் வர்ணிக்கப்படும் இவள் கலை தெய்வமாகவும், ராஜபோக வாழ்வு தருபவளாகவும் திகழ்கிறாள். பதவி உயர்வு பெறவும், வாக்கு வளம் பெறவும் இவளுக்கு குங்கும அபிஷேகம் செய்வர். திருமகள், கலைமகள் சேர்ந்த அம்சமாக இவள் இருப்பதால் வித்தை, செல்வம் இரண்டுக்கும் அதிதேவதையாக விளங்குகிறாள். மகாகவி காளிதாசர், பாஸ்கரராயர், முத்துசாமி தீட்சிதர் போன்ற மகான்கள் ராஜமாதங்கியின் அருள்பெற்ற மகான்கள் ஆவர்.
காவல் தெய்வமான ராஜமாதங்கியின் கையில் உள்ள பிரம்பால் தீயசக்தி அண்டாமலும், எதிரி தொல்லையில் இருந்தும் பக்தர்களைக் காக்கிறாள். சண்டை, சச்சரவை தடுத்து பக்தர்களின் மனதில் அமைதி நிலவச் செய்கிறாள். மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், பக்தர்களின் உடல்நலம் காக்கவும், ஐஸ்வர்யம் பெருகவும் துணைநிற்கிறாள். இந்தக் கோயிலில் செப்.4, 2025ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.
எப்படி செல்வது: தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாள்: வெள்ளி தோறும், நவராத்திரி.
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 6:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94861 01748, 94868 83450
அருகிலுள்ள கோயில்: வெங்கடேசப் பெருமாள் கோயில் 0.5 கி.மீ., (இல்லறம் சிறக்க)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 6:00 - 8:00 மணி