ADDED : செப் 19, 2025 09:01 AM

யோகநெறி அருளும் யோக கணபதி
யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் என்பது பொருள். உயிர், இறைவனின் திருவடியில் இணைவதற்கு யோகம் என்பது உள்ளர்த்தம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டுப் படிநிலைகளைக் கொண்டது யோகநெறி. உடலும் உள்ளமும் ஒன்றுக்குள் ஒன்று என்பதால், உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்து, இறைவனைத் தியானிக்க வேண்டும் என்பது யோக விதி, இந்த யோக நெறியானது, நம் வினைகளை அழிப்பதற்கு உதவும். அதனால், யோகபட்டத்தோடு, தண்டம் ஜபமாலையோடு, தியான நிலையில் விளங்குபவர் இந்த கணபதி.
தியான சுலோகம்
யோகாரூடோ யோகபட்டாபிராமோ -
பாலார்காபஸ் சேந்த்ர நீலாம்ஸுகாட்ய: | பாசேக்ஷ்வக்ஷாந் யோக தண்டம் ததாநோ -
பாயாந்நித்யம் யோக விக்நேச்வரோ ந: ||
யோக ஆரூட - யோக நிலையில் இருப்பவரும்
யோகபட்ட - யோகபட்டத்தை இருகால் முட்டிகளிலும் அணிந்திருப்பவரும்
அபிராம: - அழகுற விளங்குபவரும்
பாலார்கப: - இளஞ்சூரியன் நிறத்திருமேனியரும்
இந்த்ரநீலாம்ஸுகாட்ய - இந்திரநீல நிறப் பட்டாடையை அணிந்திருப்பவரும்
பாச - பாசம் எனும் ஆயுதத்தையும்
இக்ஷு - கரும்பையும்
அக்ஷான் - ஜபமாலையையும்
யோக தண்டம் - யோகதண்டத்தையும்
ததாந: - ஏந்தியிருப்பவருமான
யோக விக்நேசவர: - யோக கணபதியானவர்
ந: - எங்களை
நித்யம் - எப்போதும்
பாயாத் - காக்கட்டும்.
பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.
ஜபமாலை: இறைவனின் மறைப்பாற்றலைக் குறிப்பது.
கரும்பு: உயிர்களின் விருப்பங்களைக் குறிப்பது.
யோகதண்டம்: யோகநெறி அருள்வதைக் குறிப்பது.
பலன்: யோகநெறி, தவநெறி கிட்டும். விரும்பிய பயன் கிடைக்கும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்