
அந்தகாசுரன் வதம்
கைலாய மலையில் ஒருநாள் சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாகத் தன் கைகளால் மூடினாள். அதனால் உலகமே இருளில் மூழ்கியது. அதைக் கண்டு அச்சமடைந்த பார்வதி கைகளில் வியர்வை தோன்றியது. கோபமடைந்த சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து கடும் வெப்பம் தோன்றியது. அதில் பார்வதியின் கைகளில் இருந்த வியர்வைத் துளிகள் கீழே சிந்தி அதில் ஒரு ஆண் குழந்தை தோன்றியது. சிவபெருமான் கண்கள் மூடிய நிலையில் இருந்ததால் குழந்தை கரிய நிறத்திலும், பார்வையற்றும் இருந்தது. அந்தகன் (பார்வையற்றவன்) என அழைக்கப்பட்ட அவனை பார்வதி வளர்த்தாள்.
இந்நிலையில் பூமியில் இரண்யாட்சன், இரண்யகசிபு என்னும் இரு அசுரர்கள் தவம் செய்து வரங்கள் பெற்றனர். பிரகலாதன் உள்ளிட்ட மூன்று குழந்தைகள் இரண்ய கசிபுக்கு இருந்தனர். இரண்யாட்சனுக்குக் குழந்தைப்பேறு இல்லாததால் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து குழந்தைப்பேறு தர வேண்டினான்.
அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்து, 'இப்பிறவியில் இரண்யாட்சனுக்குக் குழந்தைப்பேறு இல்லை என்பதால், பார்வதியிடம் வளரும் அந்தகனை குழந்தையாக வளர்த்துக் கொள்ளச் சொன்னார். அசுரனும் அவனையே மகனாக ஏற்றான்.
இரண்யாட்சனின் இறப்புக்குப் பின் அந்தகன் பார்வை இல்லாதவன் என்பதால் அரசனாக முடியாத நிலை ஏற்பட்டது. பெரியப்பாவான இரணியகசிபு மகன்களே அரசனாகப் பொறுப்பேற்றனர். இதனால் வருந்திய அவன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து அழகிய உடல், ஒளி பொருந்திய கண்களைப் பெற்றதோடு, தன் தாயைக் கண்டு மயங்கும் போது தான் இறப்பு ஏற்பட வேண்டும் என வரம் பெற்றான். தாயைக் கண்டால் பாசமே ஏற்படும் என்பதாலும், தாயின் அழகில் மயங்குபவன் மகனாக இருக்க முடியாது என்பதாலும் தனக்கு அழிவே கிடையாது எனக் கருதினான். தன் நாட்டிற்குத் திரும்பிய அந்தகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். மூவுலகத்தையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான்.
அந்தகனின் அசுர குணங்களால் அனைவரும் துன்பத்திற்கு ஆளாயினர். தேவர்கள் எல்லாம் அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு பெண் வேடமிட்டு ஏவல் பணிகளைச் செய்தனர். எப்போது விடிவு காலம் வரும் என அவர்கள் காத்திருந்தனர். அசுரனின் முடிவு காலம் நெருங்கியது. அவனை அழிக்க சிவபெருமான், பார்வதியுடன் பூமிக்கு வந்தார்.
மந்திர மலையின் உச்சியில் உள்ள குகையில் முதுமை தோற்றத்தில் தவத்தில் ஆழ்ந்தார். அங்கு பணிப்பெண்ணாக கிழவருக்கு சேவை செய்தபடி இருந்தாள் பார்வதி. அங்கு வந்த அசுரனின் படைத்தலைவர்கள் மூவர் கிழவர் ஒருவர் தவம் புரிவதையும், பணிப்பெண் சேவை புரிவதையும் கண்டனர். தங்களின் அரசனான அந்தகாசுரனுக்குச் சேவை புரிய இந்த பெண்ணை அனுப்புமாறு கிழவரிடம் வேண்டினர். அதற்கு அவர், 'உங்கள் அரசனை என்னுடன் போரிடச் சொல்'' என்றார் கிழவர். அவர்களும் தெரிவிக்க மந்திர மலை நோக்கிப் படைத்தலைவர்களுடன் அசுரன் வந்தான். கிழவனான சிவபெருமானுக்கும், அசுரனுக்கும் போர் நடந்தது. தன் கையிலிருந்த சூலாயுதத்தால் அசுரனின் நெஞ்சில் குத்தி துாக்கினார் சிவபெருமான். ஆனால் அவன் இறக்கவில்லை.
கையில் இருந்த கதாயுதத்தால் சிவபெருமானின் நெற்றியைத் தாக்கினான். அவரது நெற்றியில் இருந்து சிதறிய ரத்தத் துளிகளில் இருந்து எட்டு பைரவர்கள் தோன்றினர். சூலாயுதத்தால் அசுரனின் உடலை தன் தலைமீது துாக்கிப் பிடித்தார். அந்தகாசுரனைக் கொல்ல ஆயிரம் ஆண்டுகள் ஆனது. அதுவரை சூலாயுதத்தால் அவனது உடலை துாக்கிப் பிடித்தபடி இருந்தார். அசுரனின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தம், சிவபெருமானையே சிவப்பாக்கியது. அவரின் நெற்றியில் தோன்றிய வியர்வையில் யோகேசுவரி , மாத்ரிகா என்ற இரு தேவிகள் தோன்றினர். இருவரும் அசுரனின் உடலில் வெளியேறிய ரத்தத்தைப் பருகினர். அவனுடைய உடலிலிருந்து ரத்தம் அனைத்தும் வெளியேறிய நிலையில், கடைசியாக அவனுக்குச் சிவபெருமான் தந்தை என்பதும், பார்வதி தாய் என்பதும் தெரிய வந்தது.
உடனே அவன் சிவபெருமானிடம் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். அவரும் மன்னித்து அசுரனின் காயங்களை போக்கினார். சிவபெருமானின் தலை மீது ஆயிரம் ஆண்டுகள் குடை போல் இருந்ததால் சிவனருள் கிடைத்தது. 'பிருங்கி' என்னும் பெயருடன் சிவகணங்களின் படைத்தலைவனாக அவனை நியமித்தார். பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றுவதற்கும், பூமி பூஜையின் போது வாஸ்து புருஷனை வழிபடுவதற்கும் வேறு புராண வரலாறு உண்டு.
உலகையே இருள் மயமாக்கி அட்டகாசம் செய்தான் அந்தகாசுரன். அவனை அழிக்க காலபைரவராகத் தோன்றினார் சிவபெருமான். காலபைரவரிடமிருந்து எட்டு திக்கும் அஷ்ட (எட்டு) பைரவர்கள் தோன்றினர். அவர்களிடமிருந்து 64 பைரவர்கள் தோன்றி அசுரனை அழித்தனர். அவன் உயிர் பிரியும் போது பசியால் துடித்தான். அப்போது பைரவர் அங்கு விளைந்திருந்த பூசணிக்காயைப் பறித்து உண்ணக் கொடுத்தார். அவன் பைரவரிடம், மக்கள் வீடுகளில் நடத்தும் எந்தவொரு பூஜை, நற்செயல்களில் தனக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டான்.
அதன்படியே விசேஷ வீடுகளில் அந்தகாசுரனை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அந்தகாசுரனை அழித்த போது அவனிடமிருந்து வெளியேறிய ரத்தத்தை குடிக்க பூதம் ஒன்றை தோற்றுவித்தார் பைரவர். தனக்கும் உலகில் மதிப்பு கிடைக்க வேண்டும் என பூதமும் கேட்க அதை 'வாஸ்து புருஷன்' ஆக்கினார் பைரவர். புதுவீடு கட்ட பூமி பூஜை நடத்தும் போது வாஸ்து புருஷனுக்கே பூஜை செய்கிறோம்.
-பக்தி தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com