ADDED : ஆக 20, 2025 01:28 PM

ஸ்ரீமுஷ்ணம் - கோரைக்கிழங்கு முஸ்தா சூரணம்
கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ளது ஸ்ரீமுஷ்ணம். இங்கு பூவராகசுவாமி என்ற திருநாமத்தோடு பெருமாள் குடியிருக்கிறார். இவர் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தி என்பதால் இக்கோயிலை 'ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்' என்பர். சுயம்பு மூர்த்தி கோயில்களில் ஸ்ரீமுஷ்ணமும் ஒன்று.
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராகம். பன்றி முகம் கொண்ட இவருக்கு பிடித்த பிரசாதம் கோரைக்கிழங்கு முஸ்தா சூரணம். தினமும் காலையில் பெருமாளுக்கு இது நைவேத்யம் செய்யப்படுகிறது. கோரைக்கிழங்கு லட்டு என்றும் சொல்வர்.
ஆணவம் கொண்ட இரண்யாட்சன் ஒருமுறை பூமாதேவியை துாக்கிச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான். தேவர்களும் முனிவர்களும் காப்பாற்றும்படி மகாவிஷ்ணுவை சரணடைந்து சிறைப்பட்ட பூமாதேவியை மீட்கும்படி வேண்டினர்.
பன்றி முகத்துடன் வராக மூர்த்தியாக புறப்பட்டார் மகாவிஷ்ணு. கடலுக்குள் சென்று பூமாதேவியை கூரிய பற்களால் தாங்கி கொண்டு வந்து மீண்டும் நிலை நிறுத்தினார். கதாயுதத்தால் தாக்க வந்த அசுரனின் கன்னத்தில் அறைந்தார் வராகர். தாங்க முடியாமல் அவனது உயிர் பிரிந்து மோட்சத்தை அடைந்தது.
அவதார நோக்கம் நிறைவேறியதும் வராகர் வைகுண்டம் திரும்ப முடிவு செய்தார். அப்போது பக்தர்கள் நலனுக்காக இங்கேயே தங்க வேண்டுமென பூமாதேவி கேட்க அவரும் ஏற்றுக் கொண்டார். பூதேவியுடன் இருப்பதால் இங்குள்ள மூலவர் பூவராகர் என அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கியபடி ஏழு நிலைகளும் ஒன்பது கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கருடாழ்வாரை வழிபட்டு உள்ளே சென்றால் கருவறையின் முன்புள்ள ஜெய, விஜயர்கள் துவாரபாலகரை தரிசிக்கலாம்.
கருவறை விமானம், 'பாவன விமானம்' எனப்படுகிறது. சிறிய மூர்த்தி; பெரிய கீர்த்தி என போற்றப்படும் பூவராகரின் திருமுகம் தெற்கு நோக்கி உள்ளது. வழக்கமாக சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு கைகளுடன் இருக்கும் பெருமாள் இங்கு இரண்டு கைகளுடன் இடுப்பில் வைத்தபடி இருக்கிறார். காலடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும் சிறிய வடிவில் உள்ளனர். சாளக்கிராமத் திருமேனி என்பதால் தினமும் திருமஞ்சனம் நடக்கிறது.
பிரம்மாவின் யாகத்தில் இருந்து தோன்றியதால் உற்ஸவருக்கு 'யக்ஞ வராகர்' என்று பெயர். இவரும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார். அம்புஜவல்லித் தாயார் கிழக்கு நோக்கி இருக்கிறார். ஆண்டாள், சப்தமாதர், உடையவர், விஷ்வக்ஸேனர், வேதாந்த தேசிகருக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலுக்குள் ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உள்ளது. வராகரால் உருவாக்கப்பட்ட அரசமரம் கோயிலின் பின்புறத்தில் உள்ள நித்ய புஷ்கரணி குளக்கரையில் உள்ளது. இதுவே கோயிலின் தலவிருட்சமாகும்.
குழந்தை வேண்டுவோர் குளத்தில் நீராடி அரசமரத்தை சுற்றிய பின்னர் மூலவரை தரிசிக்கின்றனர். கோயிலில் உள்ள சந்தான கிருஷ்ணரை கைகளில் வாங்கி மடியில் வைத்து பிரார்த்திக்க குழந்தைப்பேறு கிடைக்கும்.
சித்திரை பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், புரட்டாசி உற்ஸவம், மார்கழி வைகுண்ட ஏகாதசி, மாசிமக பிரம்மோற்ஸவம், பங்குனி உத்திர திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி வரை நடை திறந்திருக்கும். சிதம்பரத்தில் இருந்து 40 கி.மீ., விருத்தாசலத்தில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் கோயில் உள்ளது.
இனி கோரைக்கிழங்கு முஸ்தா சூரணம் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருள்
கோரைக்கிழங்கு - 10
அரிசி மாவு - 1 கி
பூரா சர்க்கரை - 1 கி
ஏலக்காய் - 15
நெய் - ½ கி
செய்முறை
கோரைக்கிழங்கின் தோலை அகற்றிக் காய வைத்து ஏலக்காயைச் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அரிசி மாவு, பூரா சர்க்கரையைக் கலந்து நெய்யை ஊற்றி உருண்டை பிடிக்க வேண்டும். பூவராக பெருமாளுக்குப் பிடித்த கோரைக்கிழங்கு முஸ்தா சூரணம் ரெடி.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி