ADDED : ஆக 20, 2025 01:27 PM

ரசித்து வாழ கற்றுக்கொள்
குறிப்பிட்ட விஷயத்தின் மீது சுவை கொள்ளுதல் ரசனை எனப்படும். ரசனை கொண்ட ஒருவரே ரசிகன் அல்லது ரசிகை எனப்படுவார். ரசம் என்பதற்கு 'சாறு' எனப் பொருள். 'சாறு' எனப்படும் இந்த ரசம் என்ற சொல் சுவை, கலை உணர்வு என பொருள்படும்.
காட்டு மூங்கில் துளைகளில் காற்று எழுப்பும் அழகு ஓசையைக் கேட்பதற்கு, ஒடும் ஆற்றின் சலசலப்புச் சத்தம் கேட்க ரசனை வேண்டும். பாரதியாருக்கு எந்தளவிற்கு ரசனை இருந்தால் அவர், 'ரசத்திலே தேர்ச்சி கொள்' என எழுதி இருப்பார். அவரைச் சுற்றிலும் எத்தனை விதமான முட்டுக்கட்டைகள்?
போதிய வருமானம் இன்மை, குடும்பப் பிரச்னை, அரசின் கண்காணிப்பு, ஊரெங்கும் பித்தன் என்ற ஏளனம் இதற்கும் நடுவில் அவரது ரசனை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது?
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொற் புதிது சோதி மிக்க நவ கவிதை
எந்நாளும் அழியாத மகா கவிதை
என்னும் வரிகள் அவரது ரசனையை வெளிப்படுத்துகிறது.
கவிதைகள், கட்டுரைகள் மட்டுமல்ல, நடைமுறையில் பேசும் போது கூட யதார்த்தமான நகைச்சுவை அவரிடம் இருந்தது. வீதியில் நடக்கும்போது சிறுவன் ஒருவன், 'இளமையில் கல்' என திரும்பத் திரும்ப படிக்க, அதைக் கேட்ட பாரதியார், இளமையில் படிக்காவிட்டால் 'முதுமையில் மண்' என சிரித்தபடி நடந்தார். காணி நிலம் வேண்டும் பராசக்தி என ரசனையுடன் பாடியவர் அவர்.
முத்துச் சுடர்போலே நிலா ஒளி
முன்பு வரவேணும் - அங்கு
கத்தும் குயில் ஓசை சற்றே வந்து
காதில் படவேணும் - எந்தன்
சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம்
தென்றல் வர வேணும்
என்கிறார்.
இன்னொரு பாட்டில்,
காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே
என்கிறார். வாழ்வில் கவலைகளை, துன்பங்களை மறக்க வைப்பது ரசனை ஒன்றே. நிதானமாக, கூர்ந்து நோக்கினால் அனைத்து பொருட்கள், படைப்புகள், இயற்கை சார்ந்தவை எல்லாவற்றிலும் ஒரு சுவை இருக்கும். அதைக் கண்டு கொள்வதே ரசனை.
குற்றால அருவியில் ஆனந்தமாக குளிப்பது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலை நிதானமாக ரசிப்பது. தஞ்சை கோபுர அழகை ரசிப்பது. நெல்லையப்பர் கோயிலின் துாண்களின் வரும் பலவித சப்தங்கள். தென்காசி கோயில் வாசலில் நம்மை உள்ளே போக வைக்கும் வெளியே தள்ளும் தென்றல் காற்றை உணர்தல். மதுரை மீனாட்சியம்மனின் மாணிக்க மூக்குத்தியின் அழகு. சிருங்கேரி சாரதாம்பாளின் ஆபரணங்களின் அழகு. காஞ்சி காமாட்சியின் மடித்து உட்கார்ந்த நிலை அழகு. சிருங்கேரி ஜகத்குரு பூஜையின் போது அர்ச்சிக்கும் பூக்களும் அவை போய் உட்காரும் இடங்களும். பத்மா சுப்பிரமணியம் நடனத்தில் பாவம்.
காருகுறிச்சி நாதஸ்வரம், லால்குடி வயலின், பாலமுரளி கச்சேரி. கட்டபொம்மனாக நடித்த சிவாஜியின் வீர வசனம் - என எங்கும் ரசனைக்கு இடமுண்டு. அதற்கான நேரம், இடம், ரசிக்கக் கூடிய மனம் வேண்டும். அதுதான் கடவுள் தரும் கொடை. பாரதியார் அதையே 'ரசத்தில் தேர்ச்சி கொள்' என்கிறார்.
அன்றாட வாழ்வில், சாப்பிடுவது, காபி குடிப்பது, காதல் மிக்க தாம்பத்யம், குழந்தைகளுடன் விளையாட்டு என எல்லாவற்றிலும் வேகம் அல்லது அவசரம் இல்லாமல் ரசித்து வாழ்தலே கலை. இன்னும் சொல்லப்போனால் அதுவே கொடுப்பினை. மனதின் தேடலே ரசனை. வாழ்வில் தேவையின்றி இயந்திரத்தனமாக ஓடுவது, ரசிப்புத்தன்மையை தராது.
மாணிக்கவாசகர் சிவபுராணத்தில், இன்று மனஅழுத்தம், வேகம் என்றெல்லாம் பேசுகிறோமே, அதுவே வாழ்க்கையாக மாறி விடக் கூடாது என சிவனிடம் வேண்டுகிறார்
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க!
என்கிறார். அதே போல திருப்பள்ளியெழுச்சிப்பாடல் ஒன்றில்,
பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா
பரபர என ஓடிக் கொண்டிருக்கும் வீட்டில் இருந்து நின் அடியார்கள் வணங்குகின்றனர் என்கிறார்.
கண்ணன் பாட்டில் பாரதியாரின் ரசனையே இப்படி பாட்டாய் வருகிறது -
தின்னப் பழம் கொண்டு தருவான்
பாதி தின்கின்ற போதிலே
தட்டிப் பறிப்பான் என்பதுடன்,
அங்காந்திருக்கும் வாய்தனிலே கண்ணன்
ஆறேழு கட்டெறும்பைப் போட்டுவிடுவான்
எங்காகிலும் பார்த்ததுண்டா - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை ஒன்றோ
எனப் பாடுகிறார்.
40 ஆண்டுக்கு முன்பு ஓசூரில் நான் பணிபுரிந்த போது என்னுடன் எழுத்தாளர் லா.ச.ரா.,வின் மகனும் பணிபுரிந்தார். லா.ச.ரா., ஒருமுறை ஓசூர் வந்த போது, மகனின் நண்பர்களாகிய எங்களையும் இரவு உணவுக்கு அழைத்தார்.
எழுத்து மட்டுமல்ல, சமைப்பதிலும் அவர் சக்கரவர்த்தி. ரசத்தை நான் கைகளில் வாங்கி ருசித்த போது, 'ரசம் தேனாக இருக்கிறது' என்று கூற, திரும்பிப் பார்த்து, 'உனக்கு திருநெல்வேலி மாவட்டமா, அங்கு தான் இந்த சொலவடை உண்டு' எனக் கூறியதுடன், 'இது தான் ரசனை; நான் செய்த ரசத்திற்கு கிடைத்த அங்கீகாரம்' என்றார்.
பாரதியாரின் பாடல்களில் கண்ணம்மா பாடல் மிக ரசிக்கப்படும் ஒன்று. ஒவ்வொரு வரியிலும் ரசனை இடம் பெறுகிறது
பண்ணுசுதி நீ எனக்கு;
பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணிப் பார்த்திடிலோர்
எண்ணமில்லை நின் சுவைக்கு
சோலை மலர் ஒளியோ; உனது
சுந்தரப் புன்னகை தான் என்கிறார்.
ரசனை என்னும் தேடல் மனிதருக்கு மனிதர் வேறுபடும். காலம், இடத்திற்கேற்ப வேறுபடும்.
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ நம் அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
உண்மையான பொருளை, உண்மையான நிலையை, உண்மையான வாழ்வை, உண்மையான மகிழ்ச்சியை அடையாளம் கண்டு அதற்கேற்றபடி வாழ்தல்தான் தேடலின் பொருள். அங்கேதான் ரசனை தோன்றுகிறது.
மனதில் எழும்பும் கேள்விகள் தான் தேடலாகிறது. அப்படி என்றால் தேடல் என்ற ஒன்று முடிந்து விடக் கூடியதா என்றால் இல்லை என்பது தான் பதில். கண்ணதாசன் எழுதுவார்
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
மனிதன் இன்ப துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்.
ரசனை என்பது தேடலின் உச்சக்கட்டம்.
இன்று பாரதியாரை அவரது படைப்புக்களை, ரசனையை புகழ்கிறோம். எந்த ஒரு படைப்பாளியையும் அவன் வாழும் காலத்தில் புகழ்ந்து, ரசிப்புத் தன்மையை அவனிடம் வெளிக்காட்டினால் அதை விட சிறந்த விருது வேறில்லை.
பொன்னல்ல, பொருள் அல்ல,
புவிஆளும் மன்னர் தரும்,
என்னவெல்லாம் அறியாத எதுவும் அல்ல,
மின்னி வரும் மெய்கவியின்,
மெய்யழகைக் காண்போர்தம்,
கண்ணில் வரும் ஒரு துளியே
கவிஞனுக்குக் கோடி
என்கிறார் கவியரசு. ஆனந்தக் கண்ணீருடன் ரசிகன் தரும் ரசனைமிகு பாராட்டே ஆஸ்கார் விருது. அப்படிப்பட்ட ரசனை தான் ஒரு படைப்பாளியை மேலும் மிளிர வைக்கும். ரசிகனின் ரசிப்புத் தன்மையும் வளரும். இதுவே மீசைக் கவிஞரின் ரசனை என்னும் ஆசை.
-ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010