
ஆற்றங்கரையோரம் அமைந்த அழகிய ஊர் நல்லுார். அதற்கு மேலும் அழகு சேர்க்க ஊரின் ஆற்றங்கரையில் கட்டப்பட்டது விநாயகர் கோயில். ஊரார் பார்த்து பார்த்து கட்டிய கோயில் அது.
அன்று அந்த கோயில் கும்பாபிஷேகம். விநாயகர் சிலை பிரதிஷ்டை நடந்தது. ஒவ்வொரு குடும்பத்திலும் புதிய வரவு வந்தது போல மகிழ்ச்சியுடன் விநாயகரை தரிசித்தனர். கும்பாபிஷேகத்தன்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது.
ஊராரின் பக்தியில் மகிழ்ந்த விநாயகர் அனைவருக்கும் அருளை வழங்கி விட்டு ஓய்வெடுக்க எண்ணிய போது கருவறைக்குள் ஒரு குரல் கேட்டது.
''நண்பா...'' விநாயகர் மெதுவாக கண் திறந்தார்.
''யாரது...?''
''என்னை ஞாபகமில்லையா... நான் தான் உன் பழைய நண்பன்''
விநாயகர் குனிந்த போது நிலையில் பதிக்கப்பட்டிருந்த கல் பேசுவது தெரிந்தது.
''ஓ! நீயா... சொல் நண்பா நலம் தானே?''
''எப்படி நண்பா நலமாக இருக்க முடியும்?''
''ஏன் என்னாச்சு?''
''பழசெல்லாம் மறந்து விட்டதா... நீயும் நானும் ஒரே மலையில் நண்பர்களாக பழகினோம். ஆனால் இப்போது இங்கு நீ மேலேயும், நான் கீழேயுமாக இருப்பது என்ன அநியாயம்?''
விநாயகர் மெல்லிய சிரிப்புடன், ''இது அநியாயம் இல்லை உண்மை''
''உண்மையா...''
''ஆம்... பொறுமை சொல்லும் உண்மை''
''நான் படும் வேதனையில் நீ வேறு பொறுமை, உண்மை என்றெல்லாம் குழப்புகிறாயே''
''இது தான்... இந்த பொறுமையின்மையே உன் வேதனைக்கு காரணம்''
படியாக கிடந்த கல் அமைதி காத்தது. மீண்டும் விநாயகர், ''நீயும், நானும் ஒரே மலையில் ஒன்றாக இருந்தோமே தவிர ஒரே குணத்துடன் இருக்கவில்லை. நடந்ததை மறந்து விட்டாயே... இந்த கோயில் கட்டுவதற்கு கல் தேர்வு செய்ய ஊர் மக்கள் மலைக்கு வந்ததை ஞாபகப்படுத்திப் பார். அப்போது தலைமைச் சிற்பி உளியால் ஒவ்வொரு கல்லாக அடித்து சோதித்தாரே... உன் மீது உளி பட்டதும் நீ வலி தாங்காமல் பட்டென சிதறி விட்டாய். ஆனால் நானோ வலியை பொறுத்துக் கொண்டு அமைதி காத்தேன். உடையாததால் நான் விநாயகர் சிலையானேன்; உடைந்ததால் நீ படியானாய்'' என விளக்கினார்.
பொறுமை என்னும் விலையைக் கொடுத்ததால் இன்று பெருமையுடன் மக்களால் போற்றப்படுகிறேன்'' என்றது. உண்மையை உணர்ந்து அமைதி அடைந்தது படிக்கல்.