sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வீக கதைகள் - 25

/

தெய்வீக கதைகள் - 25

தெய்வீக கதைகள் - 25

தெய்வீக கதைகள் - 25


ADDED : செப் 12, 2025 08:04 AM

Google News

ADDED : செப் 12, 2025 08:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்வம் அடக்கிய கிருஷ்ணர்

பாஞ்சால தேசத்தை சந்திர வம்ச மன்னரான துருபதன் ஆட்சி செய்தார். இவரது நாட்டின் தலைநகரம் காம்பில்யம். இவர் துரோணாச்சாரியாருடன் சிறுவயதில் நட்புடன் இருந்தார். இருவரும் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் பயின்றனர்.

அப்போது துருபதன், பிற்காலத்தில் தான் மன்னரானதும் துரோணருக்கு தன் நாட்டில் பங்கு கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். துருபதன் மன்னரான பின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் இருவருக்கும் பகை ஏற்பட்டது.

துரோணாச்சாரியார் தன் சீடர்களான பாண்டவர்களைக் கொண்டு துருபதனைப் போரில் வென்று அவமானப்படுத்தினார். இந்த அவமானம் துருபதனின் மனதில் ஆறாத வடுவாக பதிந்தது. துரோணாச்சாரியாரை பழிவாங்க யாகம் நடத்தினார். யாகத்தின் பயனாக திருஷ்டத்யும்னன் என்ற மகனும், திரவுபதி என்ற மகளும் பிறந்தனர். துரோணாச்சாரியாரை கொல்வதற்காகவே திருஷ்டத்யும்னனை மன்னர் துருபதன் வளர்த்தார்.

துருபதன் தனது மகள் திரவுபதிக்கு திருமணம் நடத்த விரும்பினான். அக்கால முறைப்படி சுயம்வரத்தை நடத்தினார். அதில் இளவரசர்களுக்கு போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர் இளவரசியை மணந்து கொள்வார்.

சுயம்வரம் நிகழ்ச்சியில் போட்டி நடத்தப்பட்டது. சுழன்று கொண்டிருக்கும் மீனின் கண்ணை, கீழே உள்ள ஒரு தட்டில் தெரியும் பிம்பத்தைப் பார்த்தே அம்பெய்த வேண்டும். அனைவருக்கும் இது சவாலாக இருந்தது.

பலர் முயற்சி செய்தும் பலனில்லை. வில்லின் நாணைக் கூட பலரால் வளைக்க முடியவில்லை. கர்ணன் போட்டியில் பங்கேற்றான். அவனது வில்லாற்றல் அபாரமாக இருந்தாலும் திரவுபதி அவனை திருமணம் செய்ய விரும்பவில்லை.

பாண்டவர்கள் ஐவரும் அந்தணர் வடிவில் சுயம்வரத்திற்கு வந்தனர். அர்ஜுனன் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆர்வம் கொண்டான். அதே சமயம் பக்தியும், பணிவும் அவனது மனதிற்குள் குடியிருந்தன. சகோதரர்களிடம் அனுமதி பெற்ற அர்ஜுனன், வில்லை எடுத்து நாணேற்றினான். அவனது பார்வை முழுவதும் கீழே இருந்த தட்டில் தெரியும் மீன் பிம்பத்தின் மீதே பதிந்திருந்தது. அந்தணர் வடிவில் இருந்த அர்ஜுனனின் திறமையைக் காண ஆவலாக இருந்தனர்.

அர்ஜுனன் அம்பை வில்லில் பொருத்தி, நாணை இழுத்து குறி பார்த்தான். அவனது உடலும் வில்லைப் போலவே வளைந்திருந்தது. அவனது அம்பு மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று சுழலும் மச்ச யந்திரத்தின் கண்ணைத் துளைத்தது. அனைவரும் ஆரவாரம் செய்தனர். துருபதனும், திரவுபதியும் மகிழ்ச்சி அடைந்தனர். வெற்றி பரிசாக திரவுபதியை மணந்தான். இதன் மூலம் தன் திறமையை உலகிற்கு நிரூபித்தான்.

பின்னாளில் பாண்டவர், கவுரவருக்கு இடையே குருக்ஷேத்திரப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். மூத்தவரான தர்மர் நாட்டை ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் அர்ஜுனனும், கிருஷ்ணரும் தேரில் உலா சென்ற போது, தன் வில்லாற்றலைப் பற்றி பெருமையாக, ''கிருஷ்ணா... என்னைப் போல் வில்லாளி யாருமில்லை. போரில் என் சாதனைகளை நீயே பார்த்தாயே'' என்றான் அர்ஜுனன்.

கிருஷ்ணர் பதில் பேசாமல் தேரை செலுத்தியபடி இருந்தார். சற்று நேரம் சென்றதும், தேரை நிறுத்தி விட்டு, ''அர்ஜுனா... அந்த மரத்தைப் பார். அதில் ஒரு சிறிய பறவை உட்கார்ந்திருப்பது தெரிகிறதா'' எனக் கேட்டார்.

''ஆமாம் கிருஷ்ணா! பறவை இருக்கிறது'' என்றான்.

''சரி... ஒரே அம்பில் அந்தப் பறவையின் கண்ணைக் குறி வைத்து அடிக்க முடியுமா?'' எனக் கேட்டார்.

அர்ஜுனன் சிரித்தான். ''என்ன கிருஷ்ணா இது? பறவையின் கண்ணை அடிப்பது பெரிய விஷயமா என்ன? இதோ செய்கிறேன்'' என வில்லைக் கையில் எடுத்தான்.

அவன் அம்பு தொடுத்து குறி பார்க்கத் தொடங்குவதற்குள் கிருஷ்ணர் தன் நாடகத்தை தொடங்கினார்.

திடீரென அந்த மரத்தில் ஒரே நேரத்தில் பல பறவைகள் கண்ணுக்குத் தெரிந்தன.

''கிருஷ்ணா, என்ன இது? ஒரே மரத்தில் நிறைய பறவைகள் தெரிகிறதே'' என வியப்புடன் கேட்டான்.

''எத்தனை பறவைகள் தெரிகின்றன?'' எனக் கேட்டார்.

அர்ஜுனன் திணறியபடி, ''ஒருமுறை பார்த்தால் ஒன்றாகத் தெரிகிறது. மறுமுறை பார்த்தால் பலவாக தெரிகிறதே...'' என்றான். அவனால் இலக்கை குறி வைக்க முடியவில்லை.

அப்போது கிருஷ்ணர், ''உன் வில்லாற்றல் பற்றி பெருமையாகப் பேசினாயே. ஆனால் இலக்கை குறி வைக்க என் அருள் தேவையாக இருக்கிறது பார்த்தாயா? நான் தெளிவான பார்வையை அளித்தால் தான் உன்னால் எதையும் சாதிக்க முடியும். எந்த ஒரு மனிதனுக்கும் திறமை மட்டும் போதுமானது அல்ல. புரிந்ததா?'' எனச் சொல்லி சிரித்தார் கிருஷ்ணர். அப்போதுதான் அவனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. கடவுளின் கருணையை உணர விடாமல் கர்வம் தடுக்கிறது என்பதை உணர்ந்தான். பணிவுடன், ''மன்னிக்க வேண்டும் கிருஷ்ணா! அறியாமையால் பேசி விட்டேன். உன் கருணையின்றி நான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து விட்டேன்'' என்றான். கிருஷ்ணரும் மன்னித்தார். பிறகு மரத்தை பார்த்தான். அப்போது ஒரே ஒரு பறவை மட்டும் தெரிந்தது. எளிதாக அந்த பறவையின் கண்ணை அம்பெய்து வீழ்த்தினான்.

திறமை இருந்தாலும் கடவுளின் கருணை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.

-பக்தி தொடரும்

உமா பாலசுப்ரமணியன்

umakbs@gmail.com






      Dinamalar
      Follow us