/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
ஜெர்மெனியில் இந்தியத் திருவிழா!
/
ஜெர்மெனியில் இந்தியத் திருவிழா!

ஜெர்மெனியின் பிராங்ஃபர்ட் நகரில் கடந்த 7 & 8-ம் தேதிகளில் இந்திய தூதரகம் சார்பாக 'இந்தியத் திருவிழா 2024' கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் 50 குழுமங்கள் இணைந்து சிறப்பித்த இத்திருவிழாவில் 700 ஆர்டிஸ்ட்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் வழங்க, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர். பிராங்ஃபர்ட் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் இருந்தும் வந்திருந்த இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் கலந்துகொண்ட இவ்விழாவால் ரோஸ்மார்ட் மைதானம் முழுக்க ஒரே கொண்டாட்ட மழை தான்.
பிராங்ஃபர்ட் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி எம்.எஸ் முபாரக் தலைமையில் பிராங்ஃபர்ட் நகர மேயர் Ms. நர்கஸ் எஸ்கந்தரி க்ரூன்பெர்க் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி விழா ஆரம்பமானது.
இந்திய தூதரக அதிகாரி முபாரக் பேசும் போது, 'அனைத்து அசோசியேஷன்களின் அயராத உழைப்பினால் தான் இது சாத்தியமானது. இனம், மதத்தில் வெவ்வேறானாலும் அனைவரும் ஒற்றுமையுடன் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டார்.
பிராங்க்ஃபர்ட் நகர மேயர் Ms. க்ரூன்பெர்க் பேசும்போது, 'பிராங்க்ஃபர்ட் நகரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது' என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பாட்டு, நடனம், நாடகம், இசை, மார்ஷல் ஆர்ட்ஸ் என பலவிதமான நிகழ்ச்சிகளை அனைத்து மாநிலத்தவரும் பங்கேற்று சிறப்பித்தார்கள். இரண்டு நாட்களும் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காண இந்தியர்கள் மட்டுமல்லாது ஜெர்மானியர்களும், பிற நாட்டவர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள். காலநிலையும் அதற்கு சாதகமாக, இருபதுகளை ஒட்டிய செல்சியஸே இருந்தது.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இந்திய தூதரகத்தால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, கொரோனா காரணமாக கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டு இந்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பமாயிருக்கிறது.
2018 மற்றும் 2019- களில் நடந்த நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு கலை நிகழ்ச்சிகள் என பிரித்து கொடுத்திருந்தார்கள். இந்த முறை அக்காடெமி, குழுமங்கள், சங்கங்கள் என கலை நிகழ்ச்சிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
மேடை அருகே வி.ஐ.பிகளுக்கு நாற்காலி போடப்பட்டு கம்பி தடுப்புகளால் வேலி அமைத்திருந்தார்கள். பார்வையாளர்களுக்கு பெஞ்சுகள் போடப்பட்டிருந்தது. அது போதாதபடியால் ஆங்காங்கே இருந்த சிலைகளின் படிக்கட்டுகளை மக்கள் ஆக்கிரமித்திருந்தனர். மேலதிக மக்கள், நின்று கொண்டுதான் பார்க்க வேண்டியிருந்தது.
எட்டு இந்திய ரெஸ்டாரண்டுகளுடன் ஆயுர்வேதம், மேக் இன் இந்தியா, யோகா மற்றும் கைவினைப் பொருள்களுக்கும் ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா', டிசிஎஸ் கம்பெனி ஸ்டால்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் பாலாஜி பாலு ஹரிதாஸ் நம்மிடம் பேசும் போது, 'நம்முடைய பாரம்பரிய கலைகளை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ' தமிழ் சங்கத் தலைவர் சக்திவேல் சுப்ரமணியன், செயலாளர் கண்ணன் ஆதிசேஷன் மற்றும் கமிட்டியுடன் கலந்தாலோசித்து சாட்டைக்குச்சி' மற்றும் 'பறையாட்டம்' என்ற இரண்டு கலை நிகழ்ச்சிகளை இந்த விழாவில் நிகழ்த்திக்காட்ட தேர்ந்தெடுத்துள்ளோம். படிப்பு, வேலை நேரம் போக நம்மவர்களும் இதற்காக நேரம் ஒதுக்கி நன்றாக ப்ராக்டீஸ் செய்திருக்கிறார்கள். ஜெர்மானியர்களுக்கும் பிற நாட்டவர்களுக்கும் ரசிக்கும் வகையில் நல்ல ஒரு நிகழ்ச்சியாக இந்த பாரம்பரிய நடனங்கள் இருக்கும்' என்றார்.
'அடுத்ததாக பிராங்க்ஃபர்ட் தமிழ் சங்கத்தினரின் நிகழ்ச்சி' என்று மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவிக்க, என் கையை பிடித்து யாரோ வேகமாக இழுத்தார்கள். திரும்பிப் பார்த்த போது தான் தெரிந்தது அது ஒரு குழந்தை என்று. ஐந்து வயதுக்குள் இருக்கும். ஒரு சாக்லேட் பேப்பரை என்னிடம் நீட்டிக்கொண்டே புன்னகைத்தது.
'உங்கள் கையில் இருந்து கீழே விழுந்தது, நான் டஸ்ட் பின்னில் போடட்டுமா?'
'இல்லை, நானே போட்டுக்கொள்கிறேன்' என்று வாங்கப் போனேன்.
'வேண்டாம், நானே போடுகிறேன்' என்று வேகமாக ஓடிப்போய் பக்கத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு கூட்டத்துக்குள் மறைந்து போனது.
நடந்தது இதுதான்: ஒரு சாக்லேட் சாப்பிட்டு விட்டு பேப்பரை கையில் வைத்திருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் டஸ்ட் பின்னை காண முடியவில்லை. என்னை அறியாமலேயே அந்த பேப்பர் கீழே விழுந்திருக்கிறது. அதைத்தான் அந்த குழந்தை எடுத்து வந்து கையைப் பிடித்து என்னிடம் நீட்டியது.
'பேப்பரை கையில் வைத்துக் கொண்டு ஏன் டஸ்ட் பின்னைத் தேட வேண்டும், கீழே போட்டிருக்கலாமே' என்று நீங்கள் கேட்கலாம்.
இங்கே ஜெர்மெனியில் இப்படித்தான்!
பிள்ளைகளுக்கு சாக்லேட் உரித்து கொடுத்தபின், பேப்பரை பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்வார்கள். எப்படியும் 50 மீட்டருக்கு ஒரு குப்பைத்தொட்டி இருக்கும். அருகில் சென்றவுடன் அதில் போட்டு விட்டு தான் அடுத்த வேலை நடக்கும்.
அந்தக் குழந்தை ஓடிய திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன். பஞ்சாப் ஸ்டாலுக்கு ஓடியது. அதன் முன்னே மஞ்சள், சிவப்பு, பச்சை என பலவித வண்ணங்களில் உடை அணிந்த சிங்குகளுடன் நிறைய பேர் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
மேடையில் ஏ.ஆர். ரகுமான் குரலுக்கு ராஜஸ்தான் குழுவினர் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். ரகுமான் இசையமைத்த 'தால்', 'வந்தேமாதரம்', 'பம்பாய்' திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த 'அரபிக் கடலோரம்....' என வட இந்தியர்களின் நடனங்களில் ரகுமான் பலமுறை ஒலித்துக் கொண்டிருந்தார்.
அதிலும் அந்த 'அரபிக் கடலோரம்.....' பாடலை இந்தி மற்றும் தமிழில் மாறி மாறி பாடிய மும்பை குழுவினர் மேல் நம்மை அறியாமலேயே ஒரு அன்யோன்யம் ஒட்டிக் கொண்டது. உச்சரிப்பு சரியில்லாவிடினும் நம் மொழியை இன்னொரு மாநிலத்தவர் பாடும்போது மனதுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கத் தான் செய்கிறது.
அடுத்த நிகழ்ச்சி தமிழ் சங்கம் என்று சொன்னதுமே கைத்தட்டலால் பிராங்ஃபர்ட் நகரமே அதிர்ந்தது. நம்மவர்கள் அழகாக, ஒத்திசைவுடன் பறையாட்டம் ஆடியதை பார்த்த ஒவ்வொருவருக்கும், 'நாமும் ஒரு சில நிமிடங்களாவது அவர்களுடன் இணைந்து ஆட மாட்டோமா' என்ற ஏக்கத்தை உண்டு பண்ணியிருக்கும். அவ்வளவு அருமையாக இருந்தது.
சாட்டைக்குச்சி நடனத்தை மிக கவனமாக ஆட வேண்டும். கொஞ்சம் 'மிஸ்' ஆனாலும் மற்றவரின் கண்களில் குச்சி பாய்ந்து விடும். ஆனால் இந்த நடனத்திலும் நம்மவர்கள் கலக்கி விட்டார்கள்.
நடனம் பயிற்றுவித்த ஈரோடு கலை தாய் அறக்கட்டளை திரு.சசிகுமார், எல்லோரையும் ஒருங்கிணைத்த திருமதி. சொர்ண மாலதி, மற்றும் நடனமாடிய சித்தார்த்தன் சுகுமார், மிருதுன் மாணிக்கவாசகம், கிஷோர் சக்திவேல், விஷால் சக்திவேல், ஷண்மதி சுகுமார், ஷ்ரேஸ்தா சுதாகர், அன்கலீனா அமலோற்பவராஜ், ஷிவானி குங்குமராஜ், சண்முகப்பிரியா கோபி மஞ்சுளா அனைவருக்கும் பாராட்டுக்கள். ஆக மொத்தத்தில் கண்களுக்கு நடனம், காதுகளுக்கு பாடல்கள் என ஜமாய்த்து விட்டார்கள்.
பலவிதமான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் உடைகள், விதவிதமான உணவுகள் என அந்த இரண்டு நாட்களுமே வேற்றுமையில் ஒற்றுமை தான்! இந்தியர் என்பதில் என்றுமே பெருமை தான் எமக்கு!
- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ் (ஜேசுஜி)
Advertisement