/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
துப்பாக்கி பெண்ணின் 'ஒலிம்பிக் கனவு'
/
துப்பாக்கி பெண்ணின் 'ஒலிம்பிக் கனவு'
UPDATED : செப் 08, 2024 12:15 PM
ADDED : செப் 08, 2024 12:13 PM

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரியும் ராமதிலகம், துப்பாக்கி சுடுவதில் புலி. குறி தவறாமல் சுடுவதில் மாநில, தேசிய அளவில் பதக்கங்களை குவித்துள்ளார். பணியில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மட்டுமே துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார்.
இவரது கடுமையான முயற்சி குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.நான் மீன் வியாபாரியின் மகளாக பிறந்து ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்றேன். தேசிய மாணவர் படையில் சேர்ந்தேன். அதுவே என்னை துப்பாக்கி சுடும் போட்டிக்கு அழைத்துச் சென்றது. மேல்நிலைக் கல்வி பரமக்குடி அரசுப்பள்ளியிலும், பட்டப்படிப்பை ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லுாரியிலும் படித்தேன்.
2008ல் போலீஸ் வேலைக்கு தேர்வு பெற்றேன். திருச்சியில் போலீஸ் பயிற்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றேன். அது எனது வாழ்க்கையில் முதல் பதக்கம். பின் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் போலீசாருக்கான போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று வருகிறேன்.
துப்பாக்கி சுடும் போட்டியில் ஸ்டேண்டிங், அட்டாக், லையனிங், ஸ்கோட்டிங் ஆகிய நான்கு பிரிவுகளில் பங்கேற்றுள்ளேன். டி.ஜி.பி.,யாக இருந்த சைலேந்திரபாபு, ஜாங்கிட் ஆகியோருடன் பல போட்டிகளில் கலந்து கொண்டேன்.சிவிலியன்களுக்கான துப்பாக்கி சுடும் தேசிய அளவிலான போட்டிகளில் 2011, 12, 13ம் ஆண்டுகளில் பங்கேற்றேன். அதன் பின் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஜே.ஜே., டிராபியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றேன்.
துப்பாக்கி சுடுவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2015ல் அவரிடம் ரூ.50 ஆயிரம் பரிசு பெற்றேன். 2017, 18ம் ஆண்டுகளில் மாநில அளவிலான போட்டிகளில் வெள்ளி பதக்கம் பெற்றேன்.அதன் பின் பஞ்சாப், கேரள மாநிலம், புனே, இந்துாரில் தேசிய சிவிலியன்கள் போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளேன். அண்மையில் சென்னையில் பெண் காவலர்களுக்கான தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றேன். தமிழ்நாடு அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
போலீஸ் பணி, குடும்பத்தலைவி பொறுப்புகளிடையே கிடைக்கும் நேரத்தில் பயிற்சி பெற்று பதக்கம் பெற்று வருகிறேன். ரைபிள் கிளப்புகளில் பயிற்சி பெறுபவர்கள் நாள் முழுவதும் பயிற்சி செய்வார்கள். போலீசான எனக்கு போட்டிக்கு 2 வாரங்களுக்கு முன்பு தான் பயிற்சிக்கு வாய்ப்பு கிடைக்கும்.கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சாதிக்கிறேன். கணவர் விஜயக்குமார் அளிக்கும் ஊக்கமே எனது முன்னேற்றத்திற்கு காரணம். பயிற்சியின் போது குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக அவரது வங்கிப்பணியை துறந்து எனக்கு உதவிக்கரமாக இருக்கிறார்.ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுவதில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே லட்சியம்.இவ்வாறு கூறினார்.இவரை பாராட்ட: 99626 69578.

