ADDED : மே 09, 2025 11:30 PM

செலவு பெரிதாக இல்லாமல், எளிய முறையில் சுவை மிகுந்த மாங்காய் பச்சடியை வீட்டிலே செய்யலாம். இந்த பச்சடி செய்வதற்கு வீட்டிலுள்ள பொருட்களே போதும். இதற்கென கடைக்கு போய், எதையும் வாங்கத் தேவையில்லை.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு, கடுகு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில், சிறியதாக வெட்டி வைத்த மாங்காய் துண்டுகளை போடவும்.
அத்துடன் மஞ்சள்துாள், மிளகாய்த்துாள் போட்டு வதக்கவும். இதில், 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடிவைக்க வேண்டும்.
சில நிமிடங்களுக்கு பின், மாங்காய் வெந்த பிறகு, அதில் கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் வெல்ல கரைசலை ஊற்றி, நன்றாக கலந்து விடவும். நன்றாக கொதித்த பிறகு, அடுப்பை அணைக்கவும்.
இதை, வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும். அவ்வளவு தான் சுவையான மாங்காய் பச்சடி தயார்.
இந்த மாங்காய் பச்சடியை சாதம், சப்பாத்தி, தோசையுடன் தொட்டு சாப்பிடும்போது, சுவை அற்புதமாக இருக்கும்.
இதை, அப்படியே தனியாகவும் சாப்பிடலாம். அதுவும் தனி சுவையாக இருக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கு இதனுடைய டேஸ்ட் ரொம்ப பிடிக்கும்.
இனிப்பு, புளிப்பு இரண்டு சுவைகளும் சரியான பக்குவத்தில் இருப்பதால், குட்டீஸ்கள் விரும்பிச் சாப்பிடுவர். இதை செய்யும்போது, அதிகம் புளிப்பு இல்லாத மாங்காயை தேர்வு செய்து வாங்குவது முக்கியம்.
- நமது நிருபர் -

