ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு நீங்களும் வரி விதிக்கணும்: ஜி7 நாடுகளை கூட்டுசேர்க்கும் அமெரிக்கா
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு நீங்களும் வரி விதிக்கணும்: ஜி7 நாடுகளை கூட்டுசேர்க்கும் அமெரிக்கா
ADDED : செப் 13, 2025 01:05 PM

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்குமாறு ஜி 7 கூட்டமைப்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
உலகளவில் பொருளாதாரம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை விவாதிக்க வளர்ச்சி அடைந்த நாடுகள் உருவாக்கிய அமைப்பு தான் ஜி 7 கூட்டமைப்பு. தற்போது இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஆண்டுதோறும் கூடி பேசி, உலகளாவிய பிரச்னைகள் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கின்றன. அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா அடிபணியாமல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவவது நிறுத்தப்படாது என்று மத்திய அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் நேரடியாக வரியை விதித்த அமெரிக்கா, இப்போது, ஜி 7 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது வரிகளை விதிக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளது.
வரிகளை விதிப்பதில் அமெரிக்காவுடன் ஜி 7 நாடுகள் இணைய வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ஜி 7 நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்கார் பெசன்ட், வர்த்தக பிரநிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் தொலைபேசியில் உரையாடி உள்ளனர்.
தொலைபேசி உரையாடல் குறித்து இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறி உள்ளதாவது;
உக்ரைனுக்கு எதிரான புடினின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் வருவாயை (கச்சா எண்ணெய் வாங்குவது) ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும். அதற்கு போதுமான பொருளாதார அழுத்தத்தை தர வேண்டும். எனவே, சீனா மற்றும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும்.
ஜனாதிபதி டிரம்பின் துணிச்சலான தலைமைக்கு நன்றி. ரஷ்யா மற்றும் அதன் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. நெருக்கடியான நேரங்களில் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் (ஜி 7 நாடுகள்) எங்களுடன் இணைவார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.