நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5க்குள் தேர்தல்: காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5க்குள் தேர்தல்: காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
ADDED : செப் 13, 2025 11:05 AM

காத்மாண்டு:வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படுகிறது.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் பொங்கிய இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாற ஒரு கட்டத்தில் தலைமைச் செயலகம், சுப்ரீம்கோர்ட், முன்னாள் பிரதமர்களின் இல்லத்தை சூறையாடினர்.
போலீஸ் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையில் 51 பேர் உயிரிழக்க, பிரதமர் ஒலி சர்மா, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பதவி விலகினர். பின்னர் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற, இடைக்கால பிரதமராக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்கி, தேர்வு செய்யப்பட்டு, பதவியும் ஏற்றுக் கொண்டார். புதிய அரசு அமையும் வரை அவர் இடைக்கால பிரதமராக தொடர்வார்.
இந் நிலையில், காத்மாண்டுவில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு ராணுவம் இன்று (செப்.13) அதிகாலை 5 மணி முதல் விலக்கி உள்ளது. ஆனாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் ராணுவத்தினர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி இருக்கிறது. சாலைகளில் வாகன போக்குவரத்து காணப்படுகிறது. சந்தைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
நேபாளத்திற்கு 2026ம் ஆண்டு மார்ச் 5ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று இடைக்கால அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றவுடன், நேபாள நாட்டுக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவத்சவா சந்தித்து பேசினார்.