ADDED : டிச 27, 2025 09:35 PM

நியூயார்க்: அமெரிக்காவை, 'டெவின்' என்ற குளிர்காலப் புயல் தாக்கியதால், 1,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த சில தினங்களுக்கு முன் 54 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்தது. இதனால் அம்மாகாணம் வெள்ளக்காடாக மாறியது. வெள்ளப்பெருக்குடன், பல இடங்களில் சேறும் ஆறுபோல பாய்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தநிலையில், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களை, 'டெவின்' என்ற குளிர்கால புயல் தாக்கியுள்ளது. இதனால் கனமழையும், கடும் பனிப்பொழிவும் இருந்து வருகிறது.
இதையடுத்து நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வானிலை மோசமடைந்ததால் 1,800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; 6,883 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

