ஆக.15ல் புடினை சந்திக்கும் டிரம்ப்: முடிவுக்கு வருமா உக்ரைன்-ரஷ்யா போர்?
ஆக.15ல் புடினை சந்திக்கும் டிரம்ப்: முடிவுக்கு வருமா உக்ரைன்-ரஷ்யா போர்?
ADDED : ஆக 09, 2025 06:33 AM

வாஷிங்டன்; ரஷ்ய அதிபர் புடினை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக.15ம் தேதி சந்தித்து பேசுகிறார்.
உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரைத் தொடர்ந்து புடின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். உக்ரைன் மீது குண்டுகள் வீசி வருவதாக புடினை டிரம்ப் விமர்சித்தும் வருகிறார்.
உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறார். அதன் முக்கிய கட்டமாக, ரஷ்ய அதிபர் புடினை அவர் விரைவில் சந்திக்க உள்ளார், சந்திப்பு இறுதி செய்யப்பட்டுவிட்டது, நாள் நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று புடின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.
இந் நிலையில், புடினை ஆக.15ல் சந்திக்க இருப்பதாக டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் அதில் கூறி உள்ளதாவது;
அமெரிக்க அதிபராக இருக்கும் எனக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2025 அன்று அலாஸ்காவில் நடைபெறும்.
இது தொடர்பான அடுத்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி.
இவ்வாறு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
புடின்-டிரம்ப் சந்திப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளின் அமைதி மற்றும் எதிர்கால வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்த சந்திப்பு முக்கியமானதாக இருக்கும் என்பதே அதற்கு காரணம்.