வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்: மேலும் ஒரு ஹிந்து தீ வைத்து எரிப்பு
வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்: மேலும் ஒரு ஹிந்து தீ வைத்து எரிப்பு
ADDED : ஜன 02, 2026 02:20 AM

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையில், மேலும் ஒருவரை தாக்கி தீ வைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்தாண்டு வெடித்த மாணவர்கள் போராட்டங்களை தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி, நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது அங்கு , நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.
நாட்டின் தலைமை ஆலோசகராக இவர் பதவியேற்றது முதலே, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
வங்கதேசத்தில் அடுத்த மாதம் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 18ம் தேதி வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
அங்குள்ளவர்கள் ஹிந்துக்களை தேடிப்பிடித்து தாக்குவதுடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. வங்கதேசத்தில் உள்ள 30 மாவட்டங்களில், 70க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில், மூன்று ஹிந்துக்கள் கொல்லப்பட்ட நிலையில் , நேற்று முன்தினம் மேலும் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்டார்.
ஷரியத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொகோன் தாஸ், 50, என்பவர் தன் வீட்டிற்கு சென்றபோது, வழிமறித்த கும்பல் ஒன்று, கூர்மையான ஆயுதங்களால் அவரை தாக்கியது. பின், தாசை தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடியது.
மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புத்தாண்டுக்கு முந்தைய இரவு நிகழ்ந்த இந்த தாக்குதல், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் அதிகரித்துள்ளது.
இந்திய எதிர்ப்பு உணர்வை மையப்படுத்தி, வங்கதேசத்தில் உள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

