பாலைவனங்கள் சோலைவனமாக மாறுது: பசுமை புரட்சியில் சவுதி! 100 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு
பாலைவனங்கள் சோலைவனமாக மாறுது: பசுமை புரட்சியில் சவுதி! 100 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு
ADDED : ஜன 02, 2026 02:33 AM

ஜெட்டா: சவுதி அரேபியா தன் பாலைவன நிலப்பரப்பை அடியோடு மாற்றி, மழை தாவரங்கள் வளரும் பசுமை காடுகளாக மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதற்காக, நாடு முழுதும், 100 கோடி மரங்கள் நட திட்டமிட்டுள்ளது.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் 95 சதவீத நிலப் பகுதிகள் மணல்கள் நிறைந்த பாலைவனமாகும். நாடோடி வாழ்க்கை, ஒட்டகப் பயணம் போன்றவைதான், பாலைவனம் நிறைந்த சவுதி அரேபியாவின் அடையாளம்.
அதை அப்படியே தலைகீழாக மாற்றி, பசுமை தாவரங்கள் நிறைந்த தீபகற்பமாக மாற்றுவது தான் சவுதி அரேபியாவின் தற்போதைய லட்சியம். தற்காலத்தில் பாலைவனமாக இருக்கும் சவுதி, ஒரு காலத்தில் பசுமை அரேபியாவாக இருந்தது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அப்போது மழை தவறாமல் பெய்யுமாம். தாவரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததாம். காலப் போக்கில் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாறுபாடு, பசுமை தாவரங்களை அழித்து பாலைவன மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக சவுதி அரேபியாவை மாற்றி விட்டது என, வரலாற்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இதனால், மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, நீண்டகால திட்டத்துடன் சவுதி அரேபியா அரசு களமிறங்கி இருக்கிறது. இதற்காக கடந்த 2021ம் ஆண்டில் சவுதி பசுமை திட்டத்தை பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் துவக்கினார்.
வளர்ப்பது அசாத்தியமானது
அதன்படி, 18 கோடி ஏக்கர் நிலத்தை பசுமையாக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை வரை 15 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. வரும் 2030க்குள், 60 கோடி மரங்களை நட்டு வளர்ப்பதற்கான பணிகள் சீராக நடந்து வருவதாக சவுதியின் வேளாண் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் - அல் பட்லே தெரிவித்துள்ளார்.
பாலைவனப் பகுதியில் மரம் எப்படி வளர்க்க முடியும் என்பது தான் பலரும் ஆச்சரியத்துடன் எழுப்பும் கேள்வி. சொல்லப் போனால், அங்கு மரம் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் சவுதி போன்ற குறைவான மழைப்பொழிவு, தளர்வான மண், கொளுத்தும் வெயில் போன்ற இயற்கை சூழலில் மரங்கள் வளர்ப்பது அசாத்தியமானது.
இதை கருத்தில் கொண்ட சவுதி அரசு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இரண்டாண்டுகள் ஆய்வு நடத்தியது. அதை வைத்து தங்கள் நாட்டில் நிலவும் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ற வகையில், வறட்சியை தாங்கி நிற்கும் பூர்வீக மரங்கள், புதர்களை வளர்க்க துவங்கினர். அதில் வெற்றி கிடைத்ததால், தற்போது இலக்கு நிர்ணயித்து களமிறங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சவுதியில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக பனை, அத்தி, மாதுளை, சிட்ரஸ் வகை மரங்களை அந்நாட்டு அரசு நட்டு வருகிறது. இந்த மரங்கள் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. முதல் கட்டமாக 2024 - 2030 வரை குறைந்த மனித தலையீட்டுடன் இயற்கை முறையில் மரம் வளர்ப்பு பணிகள் அங்கு நடக்கின்றன. இரண்டாம் கட்டத்தில், 2030க்குப் பின், நவீன தொழில்நுட்ப உதவியுடன் மரங்கள் நடப்படவுள்ளன.
இதில் மிகவும் முக்கியமான பணி, மரங்கள் வளர்வதற்கு ஏற்ப, நிலங்களை தயார் செய்வது தான். அதற்காக அரை சந்திர வடிவ குழிகள் அல்லது படிக்கட்டு போன்ற அணைகள் கட்டி அதில் மழைநீரை தேக்கி வைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1,150 இடங்கள் தேர்வு
இது மண் அரிப்பை தடுத்து, கோடைக் காலத்திலும் மரங்கள் பசுமையுடன் இருக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி, 400 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்த பாரம்பரிய முறைகளையும், மரம் வளர்ப்புக்காக பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர்.
செடிகளை நாற்றங்கால்களில் வளர்த்து, பின்னர் முக்கிய நகரங்கள், நெடுஞ்சாலைகள், மலைக்காடுகள், தேசிய பூங்காக்கள், பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களில் நடுகின்றனர். இதற்காக நிலம், நீர், தட்பவெட்பம், காற்று என மரம் வளர்வதற்கான சூழல் இருக்கிறதா என ஆய்வு செய்து 1,150 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வறண்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறையை சமாளிக்க, சொட்டு நீர் பாசனம் போன்ற மேம்பட்ட முறைகளும் பயன்படுத்தப்படுகிறது. நகர கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் முறையும் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மழை நீரை தேக்க சுவர் போன்ற நீர்த்தடுப்புகளை அரசு கட்டி வருகிறது. இது மண்ணை ஈரத்தன்மையுடன் வைத்திருக்க உதவுவதுடன், ஆவியாதலையும் தடுக்கிறது.
அந்த வகையில் 2030ம் ஆண்டுக்குள் 60 கோடி மரங்கள் நடும் இலக்கை சவுதி நிச்சயம் எட்டி விடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனால், பாலைவனப் பகுதிகள் அனைத்தும் பசுமையாக மாறினால், அங்கு பல்லுயிர் பெருக்கம் நிச்சயம் ஏற்படும். இலக்கான, 100 கோடி மரங்களை எட்டுவதற்கான திட்டத்தையும் சவுதி உருவாக்கியுள்ளது.

