பதவியேற்றதும் மயங்கி விழுந்த ஸ்வீடன் சுகாதார அமைச்சர்
பதவியேற்றதும் மயங்கி விழுந்த ஸ்வீடன் சுகாதார அமைச்சர்
ADDED : செப் 11, 2025 02:43 AM

ஸ்டாக்ஹோம்:ஸ்வீடனின் புதிய சுகாதார துறை அமைச்சராக எலிசபெத் லான், 48, என்பவர் பதவியேற்ற உடன் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஆக்கோ அங்காபெர்க் ஜோகன்ஸன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் புதிய அமைச்சராக கிறிஸ்தவ ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எலிசபெத் லான் நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதனை தொடர்ந்து, ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன், துணை பிரதமர் எப்பா புஷ் ஆகியோருடன் இணைந்து, சுகாதார அமைச்சர் எலிசபெத் லான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இது நேரலையில் செய்தி சேனல்களில் ஒளிபரப்பானது. அப்போது திடீரென மயக்கமடைந்த அமைச்சர் எலிசபெத் லான், மேடையிலிருந்து எதிரே செய்தியாளர்கள் அமர்ந்திருந்த இடத்தில் தலைகுப்புற விழுந்தார்.
இதை பார்த்து பதறிய பிரதமர் மற்றும் துணை பிரதமர் அவரை துாக்கி உதவி செய்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் லான், 'ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் மயங்கி விழுந்தேன். தற்போது உடல்நிலை சீராக உள்ளது' என விளக்கம் அளித்தார்.