ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானை சாடிய இந்தியா
ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானை சாடிய இந்தியா
ADDED : செப் 11, 2025 02:31 AM
ஜெனீவா:'பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை' என, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இந்திய பிரதிநிதி கிஷிஜ் தியாகி கடுமையாக சாடினார்.
ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் கிஷிஜ் தியாகி மனித உரிமைகள் கவுன்சிலில் பேசியதாவது:
அமெரிக்காவில் 2001ல் இதே நாளில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. அந்த தாக்குதலின் மூளையாக இருந்தவருக்கு புகலிடம் அளித்து, அவரை தியாகியாக போற்றிய ஒரு நாடு, பயங்கரவாதத்திற்கு எதிரான கோபத்தை காட்டுவது போல் நாடகம் ஆடுகிறது.
இந்தியாவில் புல்வாமா, உரி, பதான்கோட், மும்பை என அவர்கள் நடத்திய தாக்குதல்களின் பட்டியல் நீண்டது. இந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுற்றுலா தலத்தை கொலைகளமாக மாற்றினர்.
அதற்கு இந்தியா தக்க பதிலடி தந்தது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும், சிறுபான்மையினரை ஒடுக்கும், உலக அரங்கில் தன் நம்பகத்தன்மையை இழந்த நாடு எங்களுக்கு அறிவுரை தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.