இந்தியாவுடன் உறவு வலுப்படும்: நேபாளத்தின் இடைக்கால தலைவர் உறுதி
இந்தியாவுடன் உறவு வலுப்படும்: நேபாளத்தின் இடைக்கால தலைவர் உறுதி
ADDED : செப் 11, 2025 01:39 PM

காத்மாண்டு:இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு நன்மதிப்பு உள்ளது, இந்தியாவுடன் உறவு வலுப்படும் என்று நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், இடைக்கால அரசு தலைவருமான சுஷிலா கார்கி உறுதி அளித்துள்ளார்.
நேபாளத்தில் அரசை எதிர்த்து இளைஞர்கள் நடத்திய போராட்டங்களால் கே.பி. சர்மா ஒலி, தனது பிரதமர் பதவியை ராஜினாமாசெய்தார். அதை தொடர்ந்து ஜனாதிபதி ராஜினாமா செய்தனர். ஆரம்பத்தில் பல சமூக ஊடக தளங்கள் மீதான அரசாங்கத் தடையால் தூண்டப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்கள், பின்னர் ஒரு பரந்த ஊழல் எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்தன. அரசியல் அமைப்பை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தன.
அரசில் பொறுப்பு வகித்த அனைவரும் ராஜினாமா செய்த நிலையில், நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, இடைக்கால அரசு தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சுஷிலா கார்கி அளித்த பேட்டி:
இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த இளைஞர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்.நேபாளத்தின் கொந்தளிப்பான அரசியல் வரலாற்றைப் பற்றி சிந்தித்து, வரவிருக்கும் சவால்களை ஏற்றுக்கொள்கிறேன்.
நேபாளத்தில் கடந்த காலத்திலிருந்தே பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இப்போது நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. நேபாளத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்,நாட்டிற்கு ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த நாங்கள் முயற்சிப்போம்.
இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு நன் மதிப்பு உள்ளது. இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி. பிரதமர் மோடிக்கு நான் வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்.இதன் மூலம் இந்தியாவுடன் எங்களது உறவு வலுப்படும்.
கொல்லப்பட்ட இளைஞர்களை கவுரவித்து, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் உறுதியோடு உள்ளேன்.
இவ்வாறு சுஷிலா கார்கி கூறினார்.