மலை, கடல், தண்ணீர் மாநாடு; சரமாரியாக அறிவித்தார் சீமான்
மலை, கடல், தண்ணீர் மாநாடு; சரமாரியாக அறிவித்தார் சீமான்
ADDED : செப் 11, 2025 02:17 PM

ராமநாதபுரம்: அடுத்ததாக மலை, கடல் மற்றும் தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது குறித்த கேள்விக்கு; படிக்கும் குழந்தைகளின் பள்ளிக்கு விடுமுறையை அறிவித்து விட்டு, உங்களுடன் முதல்வர் முகாமை நடத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. சிவகங்கையில் மனுக்களை வாங்கிக் கொண்டு சாக்கடை குழியில் போட்டு விட்டு சென்றீர்கள். இது மாதிரியான கொடுமைகளை செய்வதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி. இது போல இன்னும் நடக்கும்.
துணை ஜனாதிபதி குறித்த கேள்விக்கு; துணை ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் தமிழர், கன்னடர், தெலுங்கர் என்று எல்லாம் கிடையாது. ஆர்எஸ்எஸ்-ன் கோட்பாட்டின் படி தான் பாஜ இயங்கும். அவங்க எல்லாம் ஆர்எஸ்எஸ்சில் பயிற்சி பெற்றவர்கள். தமிழராக இருந்து கொண்டு, ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து விடுவார்களா? என்ன கொள்கை வைத்துள்ளார்களே, அதைத் தான் கடைபிடிப்பார்கள். தெரியாத வடமாநிலத்தவருக்கு, இவர் தெரிந்தவராக இருக்கிறார். அவ்வளவு தான்.
திமுகவைப் போல பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. பாஜவின் அனைத்து கொள்கைகளிலும் ஒத்துப் போய் ஒரு மாநில ஆட்சி நடக்கிறது என்றால், அது திமுக ஆட்சி தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதல்முறையாக பேரணி நடத்தியதே நம் முதல்வர் தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து உலக நாடுகளுக்கு சென்று பேசியது கனிமொழி தான்.
அன்று பாஜ கூட்டணியில் இருந்தாங்க. இன்று காங்கிரஸோடு இருக்காங்க. அரசியல் தேவை லாபத்திற்காக பேசுவது. நாங்க பாசிசம், மதவாதத்திற்கு திமுக எதிரானது என்று எதை வைத்து சொல்வீர்கள். குஜராத் கலவரத்தை கருணாநிதி ஆதரித்தார். அது ஒரு மாநில பிரச்னை, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றார். இப்ப கூட்டணியில் இல்லாததால், மணிப்பூர் கலவரத்தை எதிர்க்கிறீர்கள். அனைத்து வழிகளிலும் நட்போடு இருக்கிறார்கள்.
இல.கணேசன் மறைந்த போது, பிரதமர் மோடியின் மரியாதையை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து செய்தது ஏன்? யார் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதற்கு மேல் சான்று வேண்டுமா?
விஜய் கூட்டணி குறித்த கேள்விக்கு; நான் கூட்டம் சேர்த்து சண்டைக்கு போகிறவன் அல்ல. கொள்கையை நம்பி தான். மக்களை வைத்து பிழைக்க கட்சி தொடங்கவில்லை. நீங்க முன்வைக்கப் போகும் தத்துவம் என்ன? நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு காரணமே, காங்கிரஸ், பாஜ, அதிமுக, திமுக தான். அப்புறம் இந்தக் கட்சிகளோடு சேர்ந்து என்ன செய்யப் போகிறாய். அது அவங்க முடிவு. அவங்க கட்சி. சனிக்கிழமை, சனிக்கிழமை சந்திக்கவேண்டும் என்று. அதைப் போய் நாம் என்ன கருத்து சொல்ல முடியும். அது என் விருப்பம் என்றால் என்ன செய்ய முடியும், என்றார்.
பிரசாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் குறித்த கேள்விக்கு; இதை எல்லாம் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் சிக்கல் தான். அதிகாரங்களையே எதிர்த்து சண்டையிட்டு வருவதால், 220 வழக்குகள் உள்ளன. இதுக்கே பயந்து கொண்டால் எப்படி? அதிகாரம் என்று வரும் போது அடக்குமுறைகள் இருக்கத்தான் செய்யும். நாளைக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? என்று கேட்பார்கள். தம்பி (விஜய்) இப்பத்தானே வந்திருக்கிறார்.
விமான நிலையத்திற்கு பெயர் வைக்கும் விவகாரம் தொடர்பாக; முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்கச்சொல்லி ஒரு தரப்பும், இமானுவேல் சேகரன் பெயரை வைக்குமாறு ஒரு தரப்பினரும் சொல்லுவார்கள். பேசாமல், பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வையுங்கள்.
மலைகளின் மாநாடு தர்மபுரியில் நடத்துகிறோம். அதன்பிறகு தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு நடத்தப்போகிறோம். ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் இருக்காது, இவ்வாறு அவர் கூறினார்.