ஐஸ்லாந்தின் முதல் வங்கி கொள்ளை; 50 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கிய அபூர்வம்
ஐஸ்லாந்தின் முதல் வங்கி கொள்ளை; 50 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கிய அபூர்வம்
ADDED : ஆக 13, 2025 10:13 AM

ரெய்க்ஜாவிக்(ஐஸ்லாந்து); ஐஸ்லாந்தில் பதிவான முதல் வங்கி கொள்ளை வழக்கில் 50 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலக்கப்பட்டு உள்ளது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஐஸ்லாந்து நாட்டின் கோபாவோகூர் பகுதியில் மீன்வள வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் 1975ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது. வங்கிக்கான கட்டுமான பணியின் போது மர்ம நபர்கள் அங்குள்ள சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்தனர்.
பெரிய அளவில் பணம் ஏதும் இல்லாத நிலையில், அங்கிருந்த நாணயங்களை மட்டுமே அள்ளிச் சென்றனர். இதுகுறித்து அப்போது போலீசார் பலரிடம் விசாரணை நடத்தினர்.
பல கோணங்களில் விசாரணை நடைபெற்றும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், திடீர் திருப்பமாக அந்த வங்கி கொள்ளையை அரங்கேற்றியவர் என்று கூறி ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார். அவர் யார் தகவலை போலீசார் வெளியிடவில்லை.
இந்த விவரத்தை காவல்துறை செய்தி தொடர்பாளர் ரினார் ஸ்வீன்ப் ஜோர்சன் வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் கூறியதாவது;
இப்போது அந்த கொள்ளையை அரங்கேற்றியவர் என்று ஒருவர் சரண் அடைந்து இருக்கிறார். அவரும், அவரின் நண்பர்களும் கொள்ளை அடித்த பணத்தை உணவு, குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றுக்கு செலவழித்ததாக கூறி உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம் என்பதால் வழக்கு தள்ளுபடியாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொள்ளை நடைபெற்ற போது, மர்ம நபர்கள் அள்ளிச் சென்ற நாணயங்களின் தற்போதைய மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.