வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு ; மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு ; மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு
ADDED : டிச 27, 2025 04:30 PM

டாக்கா: மத நிந்தனை என்ற போலி குற்றச்சாட்டின் கீழ் ஹிந்துக்கள் மீது வங்கதேசத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக வங்கதேச சிறுபான்மையினருக்கான மனித உரிமைகள் காங்கிரஸ் (HRCBM) குற்றம்சாட்டியுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சமீப நாட்களாக ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை, மத நிந்தனை செய்ததாக, அங்குள்ள கும்பல் மரத்தில் தலைக்கீழாக தொங்கவிட்டு, உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல, ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்பவரையும் அப்பகுதியினர் அடித்துக் கொன்றனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினமான ஹிந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதை அரசியல் வன்முறை என்றோ, ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்றோ கூறி, வங்கதேச அரசு புறக்கணிப்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு காட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத நிந்தனை என்ற போலி குற்றச்சாட்டின் ஹிந்துக்கள் மீது வங்கதேசத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக வங்கதேச சிறுபான்மையினருக்கான மனித உரிமைகள் காங்கிரஸ் (HRCBM) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கும், அவர்களின் சொத்துக்களை பறிக்கவும் இந்த விவகாரத்தை பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
மேலும் கூறியதாவது; கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரையில் வங்கதேசத்தின் 32 மாவட்டங்களில் 72 போலி மத நிந்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன. இவையனைத்தும் சிறுபான்மையினரை இலக்காக வைத்தே நடத்தப்பட்ட தாக்குதல்களாகும். தனிப்பட்ட பகையை பழிதீர்க்கவோ, நிலம் மற்றும் பிற சொத்துக்கள் தொடர்பாக பிரச்னைகளை திசைதிருப்பவோ மத நிந்தனை குற்றச்சாட்டுகளை, ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்ந்ததற்கு பிறகு, ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருகிறது. இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 27 கொலைகள் மற்றும் பல கோவில்கள் மீது தாக்குதல்கள் என மொத்தம் 258 வன்முறைத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறினால் சிறுபான்மையின மக்களிடையே மேலும் அச்சம் அதிகரிக்கும். சிறுபான்மையினர் மீதான தாக்குதல் விவகாரத்தில் வங்கதேச அரசு கண்டிப்பை வெளிப்படுத்தினாலும், இது போதுமான நடவடிக்கையாக இல்லை, எனக் குறிப்பிட்டுள்ளது.

