ADDED : ஆக 09, 2025 07:16 AM

பீஜிங் : சீனாவில் கடந்த, 48 மணி நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 17 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காணாமல் போயுள்ளனர்.
அண்டை நாடான சீனாவில், தலைநகர் பீஜிங் உட்பட பல மாகாணங்கள் கடந்த ஒரு மாதமாகவே பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன் பீஜிங்கில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 44 பேர் உயிரிழந்தனர். இதில் மியுன் மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 31 பேரும் அடங்குவர்.
இந்நிலையில், கன்சு, குவாங்டாங் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 48 மணி நேரத்தில் கன மழை கொட்டித்தீர்த்தது.
பலத்த காற்றும் வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சேறும் சகதியுடன் பாய்ந்த வெள்ளம் பல வீடுகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியது.
கனமழையால் கன்சு மாகாணத்தின் யுஷோங், லான்ஜோ உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு இடங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதனால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
கன்சு மாகாணத்தில் மட்டும் மழை வெள்ளத்தில் சிக்கி, 10 பேர் உயிரிழந்தனர், 33 பேர் காணாமல் போயினர்.
இதேபோன்று குவாங்டாங் மாகாணத்தின், குவாங்சோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் இறந்தனர், ஏழு பேர் காயமடைந்தனர்.
அங்குள்ள தயுவான் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் சிக்கிக்கொண்டனர். பல வீடுகள் சேதமடைந்ததாக மாவட்ட அவசரகால மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.