வாக்காளர்கள் குறைந்ததால் ஓட்டுச்சாவடிகள் குறையுமா?
வாக்காளர்கள் குறைந்ததால் ஓட்டுச்சாவடிகள் குறையுமா?
ADDED : டிச 27, 2025 07:59 AM

திருப்பூர்: தீவிர திருத்தத்துக்கு பிறகு வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளதால், ஓட்டுச்சாவடி எண்ணிக்கையையும் குறைக்க வேண்டுமென, அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தின், 234 தொகுதிகளிலும் நடந்த, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சரிபார்ப்பில், 97.38 லட்சம் வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.மாநில அளவில், 68 ஆயிரத்து, 467 ஓட்டுச்சாவடிகள் இருந்தன; கடந்த, செப்., மாதம், 1,200 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்று பிரிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன்படி, ஓட்டுச்சாவடி எண்ணிக்கை, 75 ஆயிரத்து, 35 ஆக உயர்த்தப்பட்டது.
வரைவுபட்டியல் வெளியிடப்பட்டு, மீண்டும் விடுபட்ட பெயர் சேர்ப்பு, புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டம் வாரியான, தேர்தல் பார்வையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசித்துவருகின்றனர். இந்நிலையில், வாக்காளர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துவிட்ட நிலையில், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கையையும் குறைக்கலாம் என, கட்சினர் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் கட்சியினர் கூறுகையில், 'பல்வேறு ஓட்டுச்சாவடிகளில், நுாற்றுக்கணக்கான வாக்காளர் நீக்கப்பட்டுள்ளனர். சில ஓட்டுச்சாவடிகளில், 500க்கும் குறைவான வாக்காளர் மட்டுமே உள்ளனர். எண்ணிக்கை குறைந்துவிட்டதால், தலா, 800 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்று பிரிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி எண்ணிக்கை குறையும். தேர்தலின் போது, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்கள், தேர்தல் பொருட்கள் என, பல்வேறு செலவு குறையும்; வேட்பாளருக்கும், ஓட்டுச்சாவடி ஏஜன்ட் செலவு குறையும். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், இதுகுறித்து, தேர்தல் கமிஷனருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என்றனர்.

