2021ல் மத்திய பட்ஜெட்டில் அறிவித்த ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகம் பணி ஏன் இன்னும் துவங்கவில்லை: முதல்வர் ஸ்டாலின் கேள்வி
2021ல் மத்திய பட்ஜெட்டில் அறிவித்த ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகம் பணி ஏன் இன்னும் துவங்கவில்லை: முதல்வர் ஸ்டாலின் கேள்வி
ADDED : டிச 22, 2025 09:46 AM

திருநெல்வேலி: 2021 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆதிச்சநல்லுார் அருங்காட்சியக பணிகள் ஏன் இன்னும் தூங்கவில்லை. கீழடி, பொருநை அருங்காட்சியங்களை மத்தியநிதி அமைச்சர் நேரில் பார்வையிட அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்
இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி வந்த முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். ரூ.235 கோடியே 94 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 33 திட்ட பணிகளை துவக்கி வைத்தார் ரூ.356 கோடியே 59 லட்சம் மதிப்பில் 11 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 45 ஆயிரம் பயனாளிகளுக்கு 101 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: திருநெல்வேலியின் அடையாளமாக விளங்குவது நெல்லையப்பர் கோயில். 1991-ல் நெல்லையப்பர் கோயிலின் வெள்ளித் தேர் தீ விபத்தில் எரிந்தது. தற்போது புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் புதிய தேர் ஓடும். பொருநை அருங்காட்சியகம் தமிழரின் பெருமை. இந்தியாவின் வரலாறு இனிமேல் தமிழ் நிலத்திலிருந்து தான் எழுதப்பட வேண்டும்.
கீழடி உள்ளிட்ட பல வரலாற்றுத் தளங்களில் நாம் மேற்கொள்ளும் அகழாய்வுகளுக்கு மத்திய பா.ஜ., அரசு எப்படியெல்லாம் தடைகள் போடுகிறது என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம்.
அருங்காட்சியகத்தின் சிறப்பு 13 ஏக்கரில் 54,296 சதுர அடியில் பொருநை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. 2021 இல் மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லுார் அருங்காட்சியகம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த பணிகள் துவங்கவில்லை.
நான் பிரதமர் மோடியையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அன்புடன் அழைக்கிறேன். கீழடி, பொருநை அருங்காட்சியகத்தை நேரில் வந்து பாருங்கள்.
காந்தி பெயர் நீக்கப்பட்டு 100 நாள் வேலைத் திட்டம் சிதைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இந்திய மக்களுக்குப் புரியாத ஹிந்திப் பெயரை சூட்டியுள்ளனர்.
மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்களே பா.ஜ.,வுக்கு பிடிக்காதவை. 10 ஆண்டுகளாக, இந்தத் திட்டத்தை பல்வேறு வழிகளில் சிதைத்துள்ளனர். வேலை நாட்கள் குறைக்கப்பட்டன; இனிமேல் மாநில அரசு 40 சதவீதம் நிதி தர வேண்டும் என புதிய சுமையை திணித்துள்ளனர்.
மேலும், அறுவடை காலங்களில் கூட 60 நாட்கள் வேலை வழங்கப்படாது என விதிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டிச., 24ம் தேதி, 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தியதற்கு எதிராக, தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில், தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஆனால், இதுகுறித்து மூச்சுக்கூட விடாமல் இருப்பவர் போலி விவசாயி பழனிசாமி தான். 'நான் தான் விவசாயி' என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர, விவசாயிகளின் உரிமை பறிக்கப்படும்போது இதுவரை வாய்திறக்கவில்லை.
மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதை நியாயப்படுத்தி, போராடிய விவசாயிகளை 'புரோக்கர்கள்' எனச் சொன்னவர் பழனிசாமி.
சிறுபான்மையினருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, நாடு முழுவதும் போராட்டம் நடந்த நிலையில், இதனால் எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார் என்று மனச்சாட்சி இல்லாமல் கேட்டவரும் பழனிசாமி தான்.
இந்த துரோகப் பட்டியலில் இப்போது 100 நாள் வேலைத் திட்டமும் சேர்ந்துவிட்டது.
பல கோடி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசை எதிர்க்க துணிச்சல் இல்லாமல், அநியாயத்திற்கு துணை போகும் இந்த செயலை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்.
இந்தியாவிலேயே நம்பர்- ஒன் மாநிலம் என்று நாம் சொல்லவில்லை; மத்திய அரசின் அறிக்கைகளே அதைச் சொல்கின்றன. நம்மை எதிர்ப்பவர்கள்கூட மறுக்க முடியாத வெற்றிதான் திராவிட மாடலின் சக்தி.
இதுவரை 1 கோடியே 13 லட்சம் சகோதரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் கூடுதலாக 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கியுள்ளன.
பா.ஜ., ஆட்சி செய்யும் சில மாநிலங்களில் கொடுத்ததை திரும்ப கேட்கிறார்கள். ஆனால், நாம் கூடுதலாக வழங்குகிறோம்; திரும்ப கேட்கவில்லை.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்
துாய்மை பணியாளரை கடித்த பாம்பு
திருநெல்வேலியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழா நடந்தது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இதற்காக பந்தல் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்தது. விழா துவங்குவதற்கு முன்பாக அங்கிருந்த சேர்களை சீரமைக்கும் பணியில் தூய்மை பணியாளர் கண்ணன் 52, ஈடுபட்டார். அப்போது தடுப்பு கம்பி குழாய் ஒன்றில் இருந்த கட்டு விரியன் பாம்பு கண்ணன் வலது கையில் கடித்தது. ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

