தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை: அ.ம.மு.க., தினகரன் சாடல்
தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை: அ.ம.மு.க., தினகரன் சாடல்
ADDED : டிச 22, 2025 09:45 AM

தேவகோட்டை: ''தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை,'' என, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டினார்.
அவர் அளித்த பேட்டி : கரூரில் நடந்த தமிழக வெற்றிக்கழகம் மாநாடு உயிர்பலியையடுத்து விதிமுறைகளை விதிப்பதின் மூலம் கூட்டம் கூடும் போது, உயிருக்கு ஆபத்து இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை கடைபிடிக்க வேண்டும்.
கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் எங்களை அணுகி, அவர்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பது உண்மை தான். எங்கள் நிலைப்பாட்டை எடுத்தபின் அதை வெளியே சொல்வோம்.
அ.ம.மு.க., சோதனைகளை தாண்டி தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகியுள்ளது. எங்களை தவிர்த்து எந்த ஆட்சியும் அமைந்து விட முடியாது. அ.ம.மு.க., அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை, லட்சியங்களை கொண்டு செல்ல என்னுடன் நிர்வாகிகள் இருக்கின்றனர். 2021 தேர்தலில் கூட காரைக்குடியில் அ.ம.மு.க.,விற்கு 45 ஆயிரம் ஓட்டுக்களை அளித்து 3 வது இடத்திற்கு கொண்டு வந்தனர்.
தை பிறந்ததும் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன் அ.ம.மு.க., கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும்.
போதை மருந்து புழக்கத்தால் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பது உண்மை.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது இங்கு எந்தளவிற்கு நடக்கிறது என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனக்கு துரோகம் இழைத்ததாக எம்.ஜி.ஆர்., சொல்லியுள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் கருணாநிதியை எதிர்த்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் கூட இன்றைக்கு ரோட்டிற்கு வந்து போராடும் நிலையுள்ளது.
தி.மு.க., அரசு அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. என்ன தான் மகளிருக்கு ரூ.1000 கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு மக்கள் தேர்தலின் போது தக்க பாடம் புகட்டுவார்கள். மக்கள் தான் எஜமானர்கள்.
அவர்கள் 2026 மே மாதம் அளிக்கும் தீர்ப்பை வைத்து தான் யார் துாய சக்தி, யார் தீய சக்தி என தெரியவரும் என்றார்.
ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் டேவிட் அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி உடனிருந்தனர்.

