போதையிலிருந்து இளைஞர்களை மீட்கணும்: வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு
போதையிலிருந்து இளைஞர்களை மீட்கணும்: வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : ஜன 02, 2026 12:14 PM

நமது நிருபர்
திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் தொடக்க விழாவில், ''போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜாதி, மத மோதல் கூடாது, இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (ஜனவரி 02) வைகோ சமத்துவ நடை பயணத்தை தொடங்கினார். திருச்சியில் இந்த நடை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பயணம் வரும் ஜனவரி 12ம் தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது.
இந்த பயணத்தின் தொடக்க விழாவில் மதிமுக நிர்வாகிகள் அழைப்பை ஏற்று, விசிக, மநீம உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். விசிக தலைவர் திருமாவளவன், ஐ.யூ.எம்.எல். தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்., புறக்கணிப்பு
நடைபயண துவக்க விழா அழைப்பிதழின் முன் அட்டையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்றுள்ளதை காரணம் காட்டி இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.
ஓரணியில்…!
நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், ''இந்த ஆண்டு நடக்கக்கூடிய தேர்தல், சமத்துவத்திற்கும் சனாதனத்திற்கும் இடையிலானது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டுள்ளோம். திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது இல்லை, அது தமிழ் மொழியை காக்க கூடியது,'' என்றார்.
வெல்க திராவிடம்
வைகோ பேசியதாவது: இந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை, கடந்த தேர்தலை விட விஞ்சிய வெற்றியை தனியாக திமுக ஆட்சி அமைக்கும். பெரும்பான்மை அமைந்து இருக்கும் வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெறும். சனாதன சக்திகளால் ஜனநயாகத்துக்கு ஆபத்து,
வெல்க திராவிடம், வெல்க தமிழகம், என்றார்.
ஆண்டின் முதல் நிகழ்ச்சி
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 2026ம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி வைகோவின் சமத்துவ நடை பயணம் தொடக்கவிழா நிகழ்ச்சி அமைந்து இருக்கிறது. இளைஞர்களுக்காகவும், எதிர்க்கால நலனுக்காகவும் பணியாற்றும் இயக்கம் திமுக. காலடி படாத இடமே இல்லாத இடம் என்ற அளவுக்கு மக்கள் பிரச்னைகளுக்கு நடை பயணம் மேற்கொண்டவர் வைகோ.
82 வயதா? 28 வயதா?
வைகோவின் நெஞ்சுரம், வேகத்தை பார்க்கும் போது அவருக்கு 82 வயதா? 28 வயதா? என எண்ணத் தோன்றுகிறது? போதை ஒழிப்பு, ஜாதி மத மோதல் தடுப்பு என்ற கருத்துகளோடு வைகோவின் நடை பயணம் நிச்சயம் வெற்றி பெறும்.
நடைபயணம் போது தான் மக்களிடம் சுலபமான முறையில் நேரடியாக தங்களது கருத்துகளை தெரிவிக்க முடியும். முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு இந்த நடை பயணத்தை வைகோ தொடங்கியுள்ளார். போதையின் பாதையில் சிக்கியவர்கள் பாதிப்பு அறிந்து விடுபட வேண்டும், உடன் இருப்பவர்கள் அவர்களை திருத்த வேண்டும்.
போதையின் பாதையில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும். போதைப்பொருள் புழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். பெரும் நெட்வொர்க்கான போதையை ஒழிக்க மாநில அரசு, மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும். போதை கடத்தல் தடுக்கப்பட வேண்டும்.
தடுக்கணும்
மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்கு போதைப்பொருள் கட்டுப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க பெற்றோரை கேட்டுக் கொள்கிறேன்.
நமது வீட்டு பிள்ளைகள் வழி தவறி போவதை நாம் கண்காணித்து தடுக்க வேண்டும். போதையின் பாதையில் இருந்து மாணவர்களை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் ஓரளவு நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் நுழைவதை தடுக்க வேண்டும். எல்லாரும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.
வேண்டுகோள்
மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்கள் கூட வெறுப்பு பேச்சை பேசுகின்றனர். நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லாரும் அச்சத்தில் வாழும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் பங்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
அன்பு செய்ய சொல்லித்தர வேண்டிய ஆன்மிகத்தை சில கும்பல் வம்பு செய்ய சொல்லி தருகிறது. வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும் அதை விட அவருடைய உடல்நலம் முக்கியம். உடல்நலம் கருதி இனி வரும் காலங்களில் இது போன்ற நடை பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

