8வது நாளாக தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
8வது நாளாக தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
ADDED : ஜன 02, 2026 01:25 PM

சென்னை: சென்னையில் 8வது நாளாக இன்றும் (ஜனவரி 02) 'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எழிலகம், வட்டார கல்வி அலுவலகம் என, அரசு துறை அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
8வது நாளாக இன்றும் (ஜனவரி 02) இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் சாலை மேம்பாலத்தில், குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினர்.
திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கண்ணனை கைது செய்து போலீசார் வலுக்கட்டாயமாக ஏற்றினர். அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

