அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பில் உள்நோக்கம் இல்லை: சொல்கிறார் நாராயணன் திருப்பதி
அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பில் உள்நோக்கம் இல்லை: சொல்கிறார் நாராயணன் திருப்பதி
ADDED : செப் 10, 2025 12:31 AM

கோவை: ''யாரும், யாரையும் சந்தித்து பேசலாம். அவர், அவரை சந்தித்தார்; இவரை சந்தித்தார் என்று சொல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றனர். ஆக்கப்பூர்வமான விஷயத்தை யாரும் விவாதிக்க தயாரில்லை,'' என, பா.ஜ. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறினார்.
கோவை பா.ஜ. அலுவலகத்தில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி. விகிதத்தை மத்திய அரசு குறைத்தாலும், அதை வசூலிப்பதும், கண்காணிக்க வேண்டியதும் மாநில அரசே. மலிவான அரசியலுக்காக தவறான கருத்தை, மாநில அரசு பரப்பி வருகிறது; அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர், வெளிநாடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார்; எதுவும் நிறைவேறவில்லை. தற்போது ஒப்பந்தம் செய்ததும் நடக்காது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்து பேசியதில், எந்த உள்நோக்கமும் இல்லை. யாரும் யாரையும் சந்தித்து பேசலாம். அதை சொல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆக்கப்பூர்வமான விஷயத்தை யாரும் விவாதிக்க தயாரில்லை.
இவ்வாறு, நாராயணன் திருப்பதி கூறினார்.