ADDED : செப் 10, 2025 12:31 AM

சென்ட்ரலில் போன் திருடிய நபர் கைது
சென்னை: ஆந்திராவைச் சேர்ந்தவர் செல்ல ரத்னபாபு. கடந்த 7ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இவரது மொபைல்போன் திருட்டு போனது. சென்ட்ரல் ரயில்வே போலீசாரின் விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புனேஷ்வர் ரே, 30, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், பெரம்பூர் ஜெஸ்ஸி கேனல் 57, என்பவரின் போனையும் இவர் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து, மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற
வாலிபர் கைது
எழும்பூர்: எழும்பூர் கெங்கு ரெட்டி தெருவில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள், 31, என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கஞ்சா விற்றது தொடர்பாக ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்தது.
காவலர் தினம்
497 பேர் ரத்த தானம்
எழும்பூர்: காவலர் தினத்தை முன்னிட்டு, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ரத்ததான முகாம் நடந்தது. போலீசார், அவரது குடும்பத்தினர் என, 497 பேர் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தோருக்கு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டன.
வாலிபரை தாக்கிய
போதை கும்பல்
சாலிகிராமம்: சாலிகிராமம், விஜயராகவபுரத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின், 34; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு தன் மைத்துனர் நவீன் என்பவருடன் சேர்ந்து, கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஆறு பேர் கும்பல் தீப்பெட்டி கேட்டு, பெஞ்சமினிடம் வீண் தகராறு செய்தனர். பின் அவர் தலையில் பீர் பாட்டிலால் அடித்தும், கையால் தாக்கியும் தப்பி ஓடினர். கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் கஞ்சா
கடத்தியவர் கைது
கொரட்டூர்: கொரட்டூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. போலீசார், கொரட்டூர் ரயில் நிலைய ஆட்டோ நிறுத்தம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராம் சிங், 38, என்பவர், ரயிலில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
350 கிலோ
குட்கா பறிமுதல்
அரும்பாக்கம்: அரும்பாக்கம் 100 அடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது குட்கா கடத்தி செல்வது தெரிய வந்தது. விசாரணையில் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம், 40, என்பது தெரிந்தது. அவர் அளித்த தகவலின்படி அம்பத்துாரில் உள்ள கிடங்கில் இருந்து 350 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, மூவர் கைது செய்யப்பட்டனர்.