பழனிசாமியை வீழ்த்துவதே ஒரே குறிக்கோள்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆவேசம்
பழனிசாமியை வீழ்த்துவதே ஒரே குறிக்கோள்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆவேசம்
ADDED : டிச 25, 2025 09:00 AM

சென்னை: ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை வீழ்த்துவதுதான் குறிக்கோள்,'' என, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன், தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:
அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., ஆரம்பித்தார். அவர் உயிரோடு இருக்கும் வரை, ஆட்சியில் இருந்தார். அவருக்கு பின் ஜெயலலிதா, கட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்தினார். எம்.ஜி.ஆரை ஏசிய நாவலர் நெடுஞ்செழியனில் இருந்து, முன்னாள் அமைச்சர் மாதவன், சண்முகம் போன்றோரை கூட, பொதுச்செயலர், பொருளாளர் போன்ற பொறுப்புகளில் நியமித்து, கட்சியை விட்டுச் சென்றவர்களையும் அழைத்து, வலுவான இயக்கமாக, ஜெயலலிதா காப்பாற்றினார்.
அதேபோல் ஜெயலலிதாவை, காளிமுத்து, வளர்மதி போன்றவர்கள் பேசாத பேச்சில்லை. ஆனாலும், அவர்களையும் அமைச்சராக்கி, சபாநாயகராக்கி முக்கியத்துவம் கொடுத்தார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்சியை நேசித்தனர்; தொண்டர்களையும் நேசித்தனர். அதனால் தான், கட்சி எந்தவிதத்திலும் சிதைந்துவிடக் கூடாது என, அனைவரையும் அரவணைத்தனர்.
ஆனால், அ.தி.மு.க., என்ற பூமாலை, இன்று குரங்கு கையில் மாட்டியுள்ளது. அந்த குரங்கு, பன்னீர்செல்வம், தினகரன் என ஏராளமானவர்களை பிய்த்து போட்டுவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஒன்றிணைவது சாத்தியமாகும். இல்லையேல், அ.தி.மு.க.,வில் இணைய மாட்டோம். பழனிசாமியை வீழ்த்துவதுதான் எங்களின் ஒரே குறிக்கோள்.
அ.தி.மு.க.,வுக்கு சம்பந்தம் இல்லாதவர் பழனிசாமி. கட்சியின் கோட்பாடு, கொள்கை என எதுவுமே அவருக்கு தெரியாது. அ.தி.மு.க., வரலாறு தெரியாத தற்குறி. அவரை வீழ்த்துவதுதான், பழனிசாமிக்கு எதிர்ப்பான அனைவருடைய கடமை.
இவ்வாறு, அவர் பேசினார்.

