சிலிகுரி கோழி யானையாக மாற வேண்டும்!: வங்கதேசம் வாலை நறுக்க சத்குரு யோசனை
சிலிகுரி கோழி யானையாக மாற வேண்டும்!: வங்கதேசம் வாலை நறுக்க சத்குரு யோசனை
ADDED : டிச 30, 2025 09:14 PM

கோவை : இந்தியாவின், சிலிகுரி பகுதியை துண்டிப்போம் என, வங்கதேச இடைக்கால அரசு கூறி வருவது குறித்த கேள்விக்கு, 'கோழி கழுத்தாக இருக்கும் சிலிகுரியை, யானையாக வளர நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் தற்போதைய சூழல் மற்றும் இந்தியாவின் சிலிகுரி காரிடார் பகுதிக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் குறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவன சத்குருவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அது குறித்த வீடியோ பதிவில் சத்குரு கூறியதாவது: இந்தியாவின், ஒரு பகுதி வெறும், 22 கி.மீ., அகலத்தில், கோழிக்கழுத்து போல் இருப்பது ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான சரியான முறை அல்ல. இதற்கான அதிகாரம் நம்மிடம், 1946 மற்றும் 47ல் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், 1972ல் இதற்கான சீர்திருத்தங்களை செய்யும் அதிகாரம் இருந்தும், நாம் அதை செய்யவில்லை.
கோழியாக இருப்பதால் தேசங்களை உருவாக்கி விட முடியாது. அது ஒரு யானையாக வளர வேண்டும். அதற்கு ஊட்டச்சத்து தேவைப்படலாம் அல்லது சில ஊக்க மருந்துகள் தேவைப்படலாம். எது தேவையோ அதை நாம் செய்தே தீர வேண்டும். எப்படியிருந்தாலும், இந்த முரண்பாடு வெறும், 78 ஆண்டுகளுக்கு முன் தான் நிகழ்ந்தது.
சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. திருத்தம் நடந்தே தீர வேண்டும். நாம் அந்த கோழிக்கு நன்றாக உணவளித்து அதை ஒரு யானையாக மாற்ற வேண்டும். யானையின் கழுத்தை கையாள்வது அவ்வளவு எளிதாக இருக்காது. எப்படியோ, இப்போது அவர்கள் இந்த விவகாரத்தை முன்னிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். இனி இது தவிர்க்க முடியாமல் நடந்தே தீரும்.
உலகில், நாடுகள் இல்லாமலும், எல்லைகள் இல்லாமலும் இருந்தால் அது அற்புதமாக இருந்திருக்கும். இந்த அழகான கோள், பிறந்த நாள் கேக்கை போல, துண்டு துண்டாக வெட்டப்பட்டு, 'இது என் துண்டு; அது உன் துண்டு' என்று சொல்லப்படுவது முட்டாள்தனமானது. ஆனால் நாம் இன்னும் அந்த அளவிலான வாழ்வியலில் தான் இருக்கிறோம்.
தற்போதைய நிலையில், தேசங்களின் இறையாண்மையை பாதுகாப்பது மிக முக்கியமானது. காலப்போக்கில் எல்லைகள் மெதுவாக தளர்ந்து ஒரு கட்டத்தில் முழுமையாக அது நீக்கப்படலாம். 1944, 45ல், ஐரோப்பாவில் மக்கள் கடுமையாக போரிட்டனர். மிக மோசமான முறையில் இரண்டாம் உலகப்போர் நடந்தது. ஆனால், இன்று பாருங்கள், அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கிறார்கள். எனவே அதை செய்வது சாத்தியம்தான். இவ்வாறு, அவர் கூறினார்.

