சென்னையில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள்; இன்று தூய்மை பணியாளர்கள் கைது
சென்னையில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள்; இன்று தூய்மை பணியாளர்கள் கைது
UPDATED : டிச 27, 2025 08:03 PM
ADDED : டிச 27, 2025 01:21 PM

சென்னை: தூய்மை பணியை தனியாருக்கு மாற்றுவதை கைவிட வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி 2 மாதங்களாக வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் இதுவரை நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் முடிவுக்கு வருவதில் சிக்கில் நீடிக்கிறது.
இதற்கிடையே பேரணியாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம். முதல்வர் ஸ்டாலினிடம் முறையிடுவோம் என்று அறிவித்தனர். இதனால் இன்று அதிகாலையிலேயே பாரி முனை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாரிமுனை குறளகத்தில் இருந்து ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். பிராட்வே பஸ் நிலையத்தில் வைத்து தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிட்டத்தட்டமாக 3 மணி நேரத்திற்கும் மேலாக மண்டபத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லாமல் உணவு,. தண்ணீர் தராமல் பஸ்சிலேயே வைத்து சுற்றி வந்துள்ளனர். நீண்ட நேரமாக எங்கு போகிறோம் என்று தெரியாமல் பஸ் வளைய வந்து கொண்டிருப்பதை அறிந்த போராட்டக்காரர்கள் கடுமையாக அதிருப்தி தெரிவித்தனர். எங்கு போவது என்று வழி தெரியாமல் இப்படி சுற்றிக் கொண்டே இருப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினர்.
நேற்று (டிசம்பர் 26)
'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தை நேற்று முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேரை, போலீசார் குண்டுகட்டாக கைது செய்து, பஸ்சிலேயே சென்னையை சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. இறுதியாக மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

