கொத்தடிமை தொழிலில் மீட்கப்பட்டோரின் வாரிசுகள் கல்விக்கு ரூ.27 லட்சம் ஒதுக்கீடு
கொத்தடிமை தொழிலில் மீட்கப்பட்டோரின் வாரிசுகள் கல்விக்கு ரூ.27 லட்சம் ஒதுக்கீடு
ADDED : செப் 18, 2025 01:59 AM

சென்னை: கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்ட, இருளர் சமூக மாணவர்களின் உயர் கல்விக்கு, அரசு தரப்பில் 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பழங்கு டியினர் நலத்துறை சார்பில், கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்படும், பழங்குடியினரின் குழந்தைகள், மறுவாழ்வு மற்றும் உயர்கல்விக்கு, அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படுகின்றன.
இருளர் குடும்பம் சமீபத்தில், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மீட்கப் பட்ட, இருளர் குடும்பத்தை சேர்ந்த, மூன்று மாணவர் களின் உயர்கல்வி செலவிற்காக, 27 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக, தமிழகத்தை உருவாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொத்தடிமையாக இருந்து மீட்கப்படுவோரில், பழங்குடியினர் இருந்தால், அவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு, துறை சார்பில் கூடுதல் முக்கியத்தும் அளிக்கப் படுகிறது.
சமீபத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த, இருளர் சமூகத்தை சேர்ந்த, மூன்று குடும்பத்தினர், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
சிறப்பு பயிற்சி அக்குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வேலை செய்தது தெரிய வந்தது.
அவர்களுக்கு, அடிப்படை கணினி பயிற்சி மற்றும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின், அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்ற, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரியா, சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப நிறுவனத்தில், இளங்கலை ஆடை வடிவமைப்பு பிரிவில் சேர்ந்துள்ளார்.
மாணவி வளர்மதி, மாணவர் முத்தமிழ் ஆகியோர், எப்.டி.டி.ஐ., எனும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், இளங்கலை டிசைன் பாடப் பிரிவில் சேர்ந்துள்ளனர். இவர்கள் கல்வி கட்டணம் செலுத்த, 27 லட்சம் ரூபாயை, பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கி உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.