கடத்தல் கும்பலிடமிருந்து 2 குழந்தைகள் மீட்பு; பெற்றோர் குறித்து போலீசார் தீவிர விசாரணை
கடத்தல் கும்பலிடமிருந்து 2 குழந்தைகள் மீட்பு; பெற்றோர் குறித்து போலீசார் தீவிர விசாரணை
UPDATED : டிச 26, 2025 09:04 AM
ADDED : டிச 26, 2025 02:08 AM

சென்னை: கடத்தல் கும்பலை சேர்ந்த பெண்களின், மொபைல் போனில் இருந்த, விதவிதமான குழந்தைகளின் படங்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சேலத்தில் மீட்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் பெற்றோரை தேடி வருகின்றனர்.
சமீபத்தில், ஈரோடு மாவட்டம், சித்தோடு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட, குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ், அவரது இரண்டாவது மனைவி நித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, 18 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. அந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர் விசாரணையில், கைதான தம்பதிக்கு பின்னணியில், சென்னையை சேர்ந்த சகோதரிகள், ஷபானா, ரேஷ்மா, மற்றும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த மகேஸ்வரி ஆகியோர் தலைமையில், 60க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வருவது தெரிய வந்தது.
சேலத்தில், இக்கும்பலைச் சேர்ந்த ஜானகி, அவரது சகோதரி செல்வி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, பிறந்து 15 நாள் மற்றும் எட்டு மாதங்களான, இரண்டு பெண் குழந்தைகளை போலீசார் மீட்டனர். அந்த குழந்தைகள், அரசு காப்பகத்தில் பராமரிக்கப்படுகின்றன.
இக்குழந்தைகளின் பெற்றோர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். கைதான ஜானகி, செல்வி, பிரவீன் ஆகியோரின் மொபைல் போனில் இருந்து, 23 குழந்தைகளின் படங்களை எடுத்து, அந்த குழந்தைகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்திற்கு, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரங்களில் இருந்து, குழந்தைகள் கடத்தி வரப்பட்டுள்ளன.
கடத்தல்காரர்களின் மொபைல் போனில் இருந்து, பறிமுதல் செய்யப்பட்ட குழந்தைகளின் படங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.
இக்குழந்தைகள் மாயமானது குறித்து, புகார் ஏதும் பதிவாகி உள்ளதா என்பது பற்றி விசாரிக்க, அந்த புகைப்படங்கள், நாடு முழுதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

